பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 03, 2026,09:04 PM IST

சென்னை: 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில் 150 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தை முதல் நாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜனவரி 9-ம் தேதி முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், பயணிகளின் நலன் கருதி இந்த சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஜனவரி 09ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்காக ஜனவரி 16 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியான ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். பயணிகள் IRCTC இணையதளம் அல்லது ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


கடந்த தீபாவளி பண்டிகையின் போது இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 2.5 லட்சம் பயணிகள் பயனடைந்தனர். அதேபோல இந்த பொங்கல் பண்டிகைக்கும் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன் கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஜனவரி 1, 2026 முதல் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அமலுக்கு வந்துள்ளதால், ரயில்களின் நேரம் மற்றும் வேகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் பயணத்திற்கு முன்னதாக ரயில் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பொங்கல் பண்டிகை - சிறப்பு ரயில்கள் :




- நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (06012) ஜனவரி 11,18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்; தாம்பரம்- குமரி சிறப்பு ரயில் (06011) ஜன.12,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு குமரி சென்றடையும்.

- குமரி-தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில்(06054) ஜன.13,20 ஆகிய தேதிகளில் குமரியில் இருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்; தாம்பரத்திலிருந்து(06053) ஜன.14,21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

- நெல்லை-செங்கல்பட்டு சிறப்பு ரயில்(06156) ஜன.9,16 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்; செங்கல்பட்டில் இருந்து(06155) ஜன.9,16 ஆகிய தேதிகளில் மதியம் 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 02.00 மணிக்கு நெல்லை சென்றடையும்

- நெல்லை-செங்கல்பட்டு சிறப்பு ரயில்(06158) ஜன.10,17 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்; செங்கல்பட்டில் இருந்து(06157) ஜன.10,17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும்.