தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்

Su.tha Arivalagan
Aug 19, 2026,04:47 PM IST

சென்னை : தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், தென் மண்டல கவுன்சில் (Southern Zonal Council) கூட்டம் மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ளது.


இம்மாநாட்டிற்கான முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.


இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குழுவின் துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.


பங்கேற்கும் மாநிலங்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் :




தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு நாளை கோவளத்தில் நடைபெற உள்ளது. தென்னக மாநிலங்களின் உள்கட்டமைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான எல்லை மற்றும் நீர்ப் பகிர்வுப் பிரச்சனைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்த உயர்மட்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் முக்கியத் தலைவர்கள்:


மாநில முதல்வர்கள்: ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தமிழகம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் இதில் நேரடியாகப் பங்கேற்கின்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சார்பில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்பார்.


அரசின் உயர் அதிகாரிகள்: அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.


கூட்டத்தின் முக்கிய நோக்கம் :


தென் மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக விவாதிப்பதும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான இணக்கமான சுமுக உறவை வலுப்படுத்துவதுமே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 


மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் இக்கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.