ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

Su.tha Arivalagan
Sep 17, 2026,02:17 PM IST

- உணர்வேற்றுக் கவிஞர் எம்.கே. திருப்பதி


அன்னை மீனாட்சி 

அப்பன் சொக்கன் 

ஆலயங்கள் 

வண்ணப் பூச்சுகளில்

பொன்னன மிளிர்கிறது 


மினுக்கும் பொன்னொளி

சினுக்கும் பெண் போல  

மின்னலென ஒளிர்கிறது!


ஆண்டுகள் பதினேழு 

ஆன பின்பு 

மீண்டுமொரு

புனிதக் குளியல்!




வாண்டுகள் பெண்டுகள் 

ஆண்கள் அரிவையர்

வம்ப மாக்கள் முதலியோர் 

கும்பாபிஷேகம் காண 

கூடினர் கதம்பவனத்தில்!


போற்றுதும் போற்றுதும் 

மாமதுரை போற்றுதும் 


வாழ்த்துதும் வாழ்த்துதும் 

மீனாட்சி வாழ்த்துதும்

வணங்குதும் வணங்குதும்

சொக்கநாதன் வணங்குதும்!


கிளி  ஏந்திய 

ஒளி படைத்த மேனியல் 

வணங்குதும் வணங்குதும்!


திருவிளையாடல்

தீட்டிய

திரு ஆலவாய் அண்ணல் 

போற்றுதும் போற்றுதும்!


திருநகர் மதுரையின்று 

திரும்பிய புறமெல்லாம் 

பக்தர்கள் வெள்ளத்தில்!


மல்லிகையூரில் 

மகா விழா 

கோவில் காட்சியும்

கோபுரக் காட்சியும் 

கோடான கோடி

கொடுப்பினை நல்கும்!


சொக்கநாதன் மீனாட்சியிடம்

சொக்கும் மனம் 

சொர்க்கத்தில் சேரும்!


சுக துக்கங்களில் 

சுகப்படாத 

சாதுக்களின் 

வர்க்கத்தில் சேரும்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)