வேகம் விவேகமானதா..?

Su.tha Arivalagan
Jan 09, 2026,01:55 PM IST

- அ.வென்சி ராஜ்


அழகியதொரு காலை நேரம். வழக்கம் போல அதிகாலை எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள் நிலா. இரு மகன்களையும் பள்ளிக்கு அனுப்ப கிளப்பிக் கொண்டே காலை உணவு மதிய உணவு என பரபரப்பாக நகர்ந்து சென்றது அவளுடைய காலைப் பொழுது.  கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்வதால் தன் கணவனுக்கு தேவையான மதிய உணவு தனக்குத் தேவையானதையும் மகன்களுக்கு தேவையானதையும் எடுத்து கட்டி தனித்தனி கூடைகளில் வைத்தாள். காலை உணவை உணவு மேஜையின் மீது எடுத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். மகன்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பியதும் தானும் குளித்துக் கிளம்பி தன் கணவரையும் கிளப்பி அனுப்பி விட்டு தனது வண்டியை மெல்ல இயக்கினாள். 


வழக்கம் போலவே தன் இடத்திலிருந்து சாலையை கடப்பதற்காக இடது பக்க இன்டிகேட்டர் போட்டு மிக மெதுவாக சாலையைக் கடந்து சாலையின் மறுபிறமுள்ள ஓரமாக செல்ல தொடங்கினாள்.  தன் அலுவலகத்திற்கு அருகில் சென்றதும் சாலையை கடக்க வேண்டி நேர்ந்தது. அதேபோல இன்டிகேட்டர் போட்டு மிக மெதுவாக அவள் சாலையைக் கடந்து சாலையிலிருந்து மண் தரையில் இறங்கி கால்களை ஊன எத்தணித்தாள். தன் இடது காலை கீழே ஊனுவதற்கு முன் எங்கிருந்தோ மின்னல் போல வந்தது ஒரு வாகனம். . . ஒரு நொடி தான். அத்தனையும் முடிந்து போனது. சற்று நிதானித்தாள். 




தன் இடது காலில்  கணுக்காலுக்கு முழங்காலுக்கும் இடைப்பட்ட இடத்தில் முழுவதுமாக  முறிந்து உடைந்த எலும்புகள் வெளியில் நீட்டி கொண்டிருந்தது. கால் பாதம் முற்றிலுமாக திரும்பி இருப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கினாள். தனக்கு இவ்வளவு நேர்ந்திருக்கிறது என்றால் எதிராளிக்கு என்ன ஆயிருக்குமோ என பயந்து பார்த்தாள். நின்றிருந்தது ஒரு 14 வயது  சிறுவன். அவன் வந்த வேகத்திற்கு அவனால் அந்த வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் கொண்டு வந்து இவளது காலில்  விட்டு விட்டான். என்ன செய்வது என்று இவளுக்கு தெரியவில்லை. அருகில் இருந்தவர்கள் எல்லாம் அவன் சட்டையைப் பிடிக்க இவள் சத்தமாக அவன் மீது தப்பில்லை அவனை விட்டு விடுங்கள் எனக்கத்தினாள்..


அவன் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் என்பதால் அவன் மீது கேஸ் கொடுக்க இவள் விரும்பவில்லை. அவன் 18 க்கு குறைந்த வயதுடைய சிறுவன் என்பதால் இவளால் எந்த காப்பீட்டுத் தொகையும் பெற இயலவில்லை. இருந்தாலும் அவனை மன்னித்து விட்டாள். மூன்று ஆண்டுகள் ஒரு தவம் போல சென்றது அவளுக்கு. நடக்க இயலாமல் நான்கு அறுவை சிகிச்சைகளைத்  தொடர்ந்து மருத்துவமனை மருந்து என தன் வாழ்நாளில் மூன்றாண்டுகளை தனியாக எடுத்து வைத்தாள். இதில் பாதிக்கப்பட்டது அவள் மட்டுமல்ல அவளுடைய கணவன் இரண்டு குழந்தைகள் மற்றும்  அவளுடைய பெற்றோருமே.


இது நிஜத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.  இதுபோல சொல்வதற்கு ஓராயிரம் நிகழ்வுகள் இருக்கின்றன. அனைவருமே ஒன்றை  சிந்திப்போம். ஒருவேளை இந்த சிறுவன் நிதானமாக வந்திருந்தால் கூட இவள் இவ்வளவு பெரிய விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கலாம். சற்று சிந்திப்போம்...


வேகம் விவேகம் ஆனதா என்று யோசிக்க வேண்டும். இன்று பெற்றோர்கள் தாங்கள் ஆசை ஆசையாக பெற்று வளர்க்கும் ஒன்று இரண்டு குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து பழக்கி விட்டார்கள். அதிலும் குறிப்பாக வாலிப வயது பிள்ளைகளுக்கு இந்த இரு சக்கர வாகனம் வாங்குவது என்பது ஒரு கனவாகவே உள்ளது.


முன்னர் போல 50,000 60 ஆயிரத்துக்கு  எல்லாம் தற்பொழுது வண்டிகள் கிடையாது. அனைத்து வண்டிகளுமே அளவுக்கதிகமான வேகத்தில் செல்கின்றன. இதனால் அதன்  தொகையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு இரண்டரை என நீண்டு கொண்டே போகிறது. பெற்றோர்கள் கடன் பட்டாவது ஏதோ சிரமப்பட்டு அந்த வண்டியை வாங்கி தரக்கூடிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்...


குழந்தைகளும் அதை வாங்கிக் கொண்டு அளவுக்கதிகமான வேகத்தில் சென்று தங்கள் வாழ்நாளை இளம் வயதிலேயே முடித்துக் கொள்கிறார்கள். அல்லது  இவர்களின் வேகத்தால்  பிறர் பாதிக்கப்பட்டு அதற்கான இழப்பீடு தொகையை  அவர்கள் தர வேண்டியதாக இருக்கிறது. எனவே வாலிப வயது பிள்ளைகளும் பெற்றோர்களும் சற்று சிந்தியுங்கள். வாகனம் தேவைதான் இருசக்கர வாகனம் கட்டாயம் தேவைதான். எவ்வளவு வேகம் உள்ள இரு சக்கர வாகனம் வாங்குகிறோம், இது நம்முடைய சாலைகளில் ஓட்டுவதற்கு தகுதி உள்ளதா என சற்று  சிந்திப்போம்.


திரைப்படங்களில் கதாநாயகர்கள் ஓட்டுகிறார்கள் என்பதற்காக அதே போல வாகனங்களை வாங்கி நாமும் நம்முடைய சாலைகளில் ஓட்ட நினைப்பது முட்டாள்தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  எனவே மிக அதிக வேகம் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களை வாங்குவதும் தவறு. அதை அதே வேகத்தில் நம்முடைய சாலைகளில் ஓட்ட நினைப்பது அதைவிட பெரிய தவறு என்பதை வாலிப வயது குழந்தைகள் கருத்தில் கொள்ள வேண்டும். மிதமான வேகம் மிகவும் நன்று என்பதை புரிந்து கொண்டு மெல்ல செல்வோம். கொடுமையான பல விபத்துகளை தவிர்ப்போம். வாழ்க்கை வாழ்வதற்கே. ..அந்த வாழ்வும் ஒரு முறை தான். அதை மகிழ்வாக, பாதுகாப்பாக, பிறருக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மன நிறைவோடு வாழ முற்படுவோம். எனவே சாலையில் வேகம் விவேகம் அல்ல என்பதை புரிந்து கொள்வோம்.


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)