இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுறுவிய அமெரிக்கா.. இலங்கை எம்.பி. கவலை
கொழும்பு: இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஈரானியக் கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் இலங்கக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இது கவலைக்குரிய விஷயம் என இலங்கை எம்.பி நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் 'ஐரிஸ் தேனா' என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்த சம்பவம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீரர்கள், இந்தியாவில் கடற்படை பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பியபோது இந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது இந்தியர்களையும் கூட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இலங்கை எம்.பியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே அளித்துள்ள ஒரு பேட்டியில், போர் நடக்கும் இடத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் இத்தகைய ராணுவத் தாக்குதல்கள் நடப்பது இலங்கைக்கும், அண்டை நாடான இந்தியாவுக்கும் ஒரு தீவிரமான பாதுகாப்பு கவலையாகும்.
மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல், சமீபத்தில் இந்தியாவில் (விசாகப்பட்டினம்) நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இத்தகைய மோதல்கள் பரவுவது பிராந்திய நிலைத்தன்மையைப் பாதிக்கும். எனவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்றார் அவர்.