பக்திசாரி!

Su.tha Arivalagan
Nov 02, 2026,10:58 AM IST

- ராஜஸ்ரீ


வைணவத்தில் ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர்கள். அவர்களில் ஒருவர் திருமழிசையில் அவதரித்த திருமழிசை  ஆழ்வார். இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.


சிவபெருமான் இவரது பக்தியை பாராட்டி  இவருக்கு பக்திசாரர் என்னும் சிறப்புப் பெயரை வழங்கினார். அதனால் வைணவர்கள் எவருக்கேனும் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு பக்திசாரர் என பெயரிட்டு மகிழ்வர்.


நமது கதாநாயகன் ரவிக்கு தைமாதம் மகம்  நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தது. ஆனால் அது பெண் குழந்தை. அதனால் என்ன பெயர் வைப்பது என குழம்பினான்.


ஒரு நாள் வெளியே செல்லும் பொழுது இவன் நண்பன் ராமு எதிரே வந்தான். அவன் ரவியைப் பார்த்து என்னடா ரவி, குழந்தை பிறந்ததா? என்று கேட்டான்.


ரவியும் பிறந்தது என்றான்.


அதற்கு ராமு வாழ்த்துக்கள். என்ன குழந்தை? ரவியும் பெண் குழந்தை என்றான்.




அதைக் கேட்ட ராமு பரவாயில்லை. மஹாலஷ்மியே வந்து பிறந்திருக்கிறாள். சரி, என்ன பெயர் வைத்திருக்கிறாய்? என்று கேட்டான்.


ரவி  அதான்டா குழப்பமா இருக்கு என்றான்.


அதற்கு ராமு பேர் வைக்கறதுல என்னடா குழப்பம்? என்று கேட்டான்.


குழப்பம் என்னன்னா குழந்தை தை மாதம் மகம் நட்சத்திரத்தில பிறந்திருக்கு. ஆண் குழந்தையா இருந்தா பக்திசாரர் என பெயரை வைத்திருப்பேன். ஆனா இது பெண்ணா பிறந்துடுத்தே. அதான் என்ன பெயர் வைக்கறதுன்னு குழம்பிண்டிருக்கேன் என்றான் ரவி.


அதைக்கேட்ட ராமு சிரித்தவாறு ஃபூ..இதுக்கு போயா குழம்பறே. பேசாமல் பக்திசாரி என்று வைத்துவிடு. புதுமையாக இருக்குமே என்றான்.


ரவி இந்த ஐடியா நல்லாயிருக்கு. இதையே வெச்சுடறேன் என்றான்.


அதன்படியே தன் மகளுக்கு பக்திசாரி என பெயர் வைத்துவிட்டான். ஆனால் அந்த பெயரை வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று பல வருடங்கள் கழித்துத்தான் தெரிந்தது.


சாரி என்றால் புடவை இல்லையா. அதனால் அவன் பெண் புடவையின் மேல் அதிக பக்தி கொண்டு பீரோ முழுக்க  புடவைகளாக வாங்கி அடுக்கித் தள்ளி விட்டாள்.


ஒருநாள் அவள் ரவியிடம், இருக்கிற புடவையெல்லாம் பழையதாகிவிட்டதால் புதிய புடவை ஒன்று வாங்க வேண்டும் என்றாள்.


அதைக்கேட்ட ரவி திடுக்கிட்டான். 


இப்படி இவள் புடவையா வாங்கித் தள்ளினால் இவளுக்கு வர்ற கணவனின் சம்பளம் புடவைக்கே சரியாகிவிடும் போலிருக்கே என்று கவலைப்பட்டான்


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)