சம்பந்தியாகும் நீதிபதி

Su.tha Arivalagan
Sep 26, 2026,03:57 PM IST

- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்


நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது.


முனுசாமி என்னும் ஏழையின் மகள் ஒரு உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவனை காதலிக்கிறாள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருக்கிறாள். முனுசாமி மறுக்கிறான்.


மகள் நீதிமன்றத்தில் முறையிடுகிறாள். முனுசாமி நீதிபதியிடம் ஐயா, நான் மிகவும் ஏழை. ஆனால் என் மகளோ உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை காதலிக்கிறாள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள். இது எப்படி ஐயா சாத்தியமாகும்? நீங்களே அவளுக்கு புத்திமதி சொல்லுங்கள் என்றான்.


வழக்கை ஆராய்ந்த நீதிபதி முனுசாமியிடம்  உன் மகளின் வயது 23 அவள் மேஜராகிவிட்டாள். சட்டப்படி அவள் விருப்பம்போல் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். நீ அதை தடுக்கக் கூடாது. இதுதான் என்  தீர்ப்பு. சரியா?  என்றார்.




முனுசாமி அதைக்கேட்டு சிரித்தவாறு சரிங்க சம்பந்தி என்றான். நீதிபதி திடுக்கிட்டு சம்பந்தியா, என்ன உளறுகிறாய்? என்று கேட்க முனுசாமி என் மகள் காதலிப்பது உங்கள் மகனைத்தான் என்றான்.


அவ்வளவுதான். மயக்கம் போட்டு விழுந்த நீதிபதி இந்த கதை வெளி வரும் வரை  எழுந்திருக்கவேயில்லை.


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)