Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. முள் வழி நடந்து முல்லை மலர்ந்தவள்!

Su.tha Arivalagan
Apr 29, 2026,01:50 PM IST

- பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு  


திருவாரூர் மாவட்டம், நெய்வாசல் கிராமம். அங்கே பிறந்தாள் தாமரை. அப்பா குடிகாரர். தினமும் அம்மாவை அடிப்பார். தாமரைக்கு 15 வயது இருக்கும்போது, அம்மா நோயில் இறந்துபோனாள். அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு தாமரையை வீட்டை விட்டுத் துரத்தினார்.


கையில் 20 ரூபாய். வயிற்றில் பசி. மனதில் பயம். தஞ்சாவூர் பஸ் ஏறினாள். 


தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் 3 நாள் படுத்தாள். பசிக்கு தண்ணீர் குடித்தாள். நான்காம் நாள் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. சம்பளம் மாதம் 500 ரூபாய். தங்க ஒரு மூலை. 


ஆனால் சோதனை அங்கும் விடவில்லை. ஹோட்டல் முதலாளி மோசமானவன். "சம்பளம் வேணும்னா என் இஷ்டப்படி நடக்கணும்" என்றான். தாமரை அன்றே வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தாள். "பசியால செத்தாலும் சாவேன். மானத்தை விடமாட்டேன்" என்று முடிவெடுத்தாள்.


தெருவில் பூ விற்றாள். பழைய பேப்பர் பொறுக்கினாள். கோயில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் அம்மா சொன்ன வார்த்தை காதில் ஒலித்தது: "கையேந்தாதே தாமரை. உழைச்சு சாப்பிடு."


ஒருநாள் ரோட்டோரம் டெய்லர் கடை ஒன்றைப் பார்த்தாள். வயதான அம்மா ஒருவர் ஜாக்கெட் தைத்துக் கொண்டிருந்தார். தாமரை கேட்டாள், "அம்மா, நான் வேலை கத்துக்கட்டுமா? சம்பளம் வேண்டாம். சோறு மட்டும் போடுங்க."


கமலம் பாட்டி என்ற அந்த அம்மா அவளை சேர்த்துக்கொண்டார். தாமரை 6 மாதத்தில் தையல் கற்றுக்கொண்டாள். பகலில் தைத்தாள். இரவில் அதே கடையில் படுத்து, பழைய நியூஸ் பேப்பரை எடுத்து படித்தாள். 10-வது வரை படித்திருந்தாள். மீண்டும் படிக்க ஆசை வந்தது.




கமலம் பாட்டி உதவி செய்தார். தனியாரில் +2 எழுத வைத்தார். தாமரை முதல் வகுப்பில் பாஸ். அடுத்து தொலைதூரக் கல்வியில் B.A. தமிழ். பகல் முழுக்க ஜாக்கெட், சுடிதார் தைப்பாள். இரவு முழுக்க படிப்பாள். 


ஊர்க்காரர்கள் கேலி செய்தார்கள். "பொம்பள பிள்ளைக்கு என்ன படிப்பு? தனியா இருக்கிறவளுக்கு கல்யாணம்தான் முடிவு. இல்லைனா கெட்டுப் போயிடுவா."


தாமரை காதில் வாங்கவில்லை. "முள் குத்தினாலும் நடப்பேன். ஒருநாள் முல்லையா மலர்வேன்" என்பாள்.


B.A. முடித்ததும், டெய்லரிங் தொழிலை பெரிதாக்கினாள். "தாமரை மகளிர் சுயஉதவி குழு" ஆரம்பித்தாள். தன்னைப் போல கணவனால் கைவிடப்பட்ட, வீட்டை விட்டு விரட்டப்பட்ட 10 பெண்களுக்கு இலவசமாக தையல் சொல்லிக் கொடுத்தாள். 


பாங்க் லோன் வாங்கினாள். 5 தையல் மெஷின் வாங்கினாள். சுடிதார், நைட்டி, பள்ளி சீருடை என்று தைத்து கடைகளுக்கு சப்ளை செய்தாள். 


5 வருடத்தில், தாமரையின் குழுவில் 200 பெண்கள். மாதம் 2 லட்சம் வருமானம். தஞ்சாவூர் கலெக்டரே நேரில் வந்து "சிறந்த மகளிர் தொழில்முனைவோர்" விருது கொடுத்தார்.


அன்று மேடையில் தாமரை பேசினாள்:


"என்னை வீட்டை விட்டுத் துரத்திய அப்பா இப்போ என் காலில் விழுறார். என்னை 'மானங்கெட்டவ'னு சொன்ன ஊர்க்காரங்க இப்போ 'எங்க ஊரு பொண்ணு'னு சொல்றாங்க. என்னை அசிங்கப்படுத்த நினைச்ச ஹோட்டல் முதலாளி இப்போ என் கடையில் துணி தைக்க க்யூவில் நிக்கிறார்.


நான் அழுத இரவுகள் அதிகம். ஆனால் ஒவ்வொரு கண்ணீரும் என்னை உரமாக்கியது. சமுதாயம் என் காலில் முள்ளை குத்தியது. நான் அந்த முள்ளை எடுத்து வேலியாக்கி, என் வாழ்க்கையை பாதுகாத்தேன்.


பெண்ணே, நீ தனியா நின்னா பயப்படாதே. கூட்டம் இல்லாமலும் கோயில் தேர் நகரும். நீயும் நகர்வாய். இன்று முள் குத்தும். நாளை முல்லை மலரும்.


கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்து கேட்டாள், "அக்கா, கல்யாணம் பண்ணிக்கலையா?"


தாமரை சிரித்தாள். "பண்ணிக்கிட்டேன் மா. என் தொழிலை, என் 200 தங்கச்சிகளை, என் தன்மானத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இதை விட பெரிய தாலி வேற என்ன இருக்கு?"


அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.


தனிமை ஒரு தண்டனை இல்லை, தவம்: தாமரை தனியாக இருந்ததால்தான் தன்னை உணர்ந்தாள். உனக்கு யாரும் இல்லை என்றால், நீயே உனக்கு எல்லாமாக இரு.


முள் இல்லாமல் முல்லை இல்லை: அவமானம், பசி, கேலி, தனிமை - இதெல்லாம் முள். இதைத் தாண்டினால்தான் வாழ்க்கை என்ற முல்லை மலரும்.


பெண் என்பவள் பாரம் இல்லை, பாராளும் சக்தி:  பொம்பள பிள்ளைக்கு என்ன படிப்பு? என்று கேட்டவர்களுக்கு தாமரை 200 குடும்பத்துக்கு சோறு போட்டு பதில் சொன்னாள்.


நீ வீழ்ந்தாலும் உன் மானம் வீழக்கூடாது: ஹோட்டல் முதலாளியிடம் பணிந்திருந்தால் தாமரைக்கு சோறு கிடைத்திருக்கும். ஆனால் சிகரம் கிடைத்திருக்காது. பசியை விட மானம் பெரிது.


முள் வழி நடந்தவள்தான், முல்லை மணக்க வைப்பாள். அவள் காலில் ரத்தம் வரலாம். ஆனால் அவள் நடந்த தடத்தில் நாளை ரோஜா பூக்கும்.


பெண்ணே, நீயும் அந்த முல்லைதான். முள்ளுக்கு பயப்படாதே. மலர்ந்து காட்டு. உலகம் மணக்கும்.


(பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு, உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி , பட்டுக்கோட்டை)