vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

Su.tha Arivalagan
Dec 30, 2025,08:38 AM IST

ஸ்ரீரங்கம் : பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், 2025-ம் ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்வான 'சொர்க்கவாசல்' திறப்பு இன்று (டிசம்பர் 30) அதிகாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.


ஸ்ரீரங்கத்தில் நீண்ட நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா இந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. டிசம்பர் 20ம் தேதி துவங்கி, பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. பகல் பத்து உற்சவம் டிசம்பர் 29ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணியளவில், ஆயிரக்கணக்கான பக்தர்களின் "கோவிந்தா... ரங்கா..." முழக்கத்திற்கு இடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்ட நம்பெருமாள், கண்கவர் ரத்தின அங்கி மற்றும் முத்துக் கொண்டை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் கூடி ரங்கநாதரை தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று (டிசம்பர் 29) பகல் பத்து விழாவின் இறுதி நாளில், நம்பெருமாள் மங்கையர்க்கரசியாக மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களை பரவசப்படுத்தினார்.


இன்று முதல் ஸ்ரீரங்கத்தில் 'இராப்பத்து' உற்சவம் தொடங்குகிறது.இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். பக்தர்கள் இதன் வழியாக சென்று ரங்கநாதரை வழிபடலாம்.அடுத்த பத்து நாட்களுக்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) எழுந்தருளி பல்வேறு அலங்காரங்களில் சேவை சாதிப்பார். வரும் ஜனவரி 09-ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் இந்த 21 நாள் பெருவிழா இனிதே நிறைவடையும்.




ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் : 


முத்தங்கி சேவை : பகல் பத்து நாட்களில் மூலவர் ரங்கநாதர் முழுவதும் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்து காட்சியளிப்பார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த சேவையை தரிசிக்க லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.


அரையர் சேவை: 1000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமான 'அரையர் சேவை' இங்கு மிக விசேஷம். நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களுக்கு அபிநயம் பிடித்து அரையர்கள் பாடுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.


இரட்டைப் பிரகார உலா: நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சொர்க்கவாசல் நோக்கி வரும்போது 'நாழிகேட்டான் வாசல்' கடந்து வரும் அழகே தனி.