நன்றியால் மீண்டும் மலர்ந்த நட்பு
Oct 17, 2026,05:23 PM IST
- சு. மலர்விழி, மதுரை
செல்வாவும் பிரபுவும் கல்லூரிக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். செல்வா படிப்பில் சிறந்தவன். தாயை இழந்த அவனுக்குக் குடும்பத்தில் போதிய அன்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. வீட்டில் வேலைகளையும் செய்துகொண்டு மனவருத்தத்துடன் வாழ்ந்தான்.
பிரபு படிப்பில் சராசரியாக இருந்தாலும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவன். செல்வா வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன் தாயின் அன்பையும் அரவணைப்பையும் பகிர்ந்துகொள்வான். தேர்வுக் காலங்களில் தனது குறிப்புகளைக் கொடுத்தும் உதவுவான்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் செல்வாவுக்கு நல்ல வேலை கிடைத்தது. பிரபுவுக்கு வேலை கிடைக்கச் சற்று காலதாமதமானது. புதிய வாழ்க்கையில் மூழ்கிய செல்வா, நண்பன் செய்த உதவிகளை மறந்துவிட்டான்.
சில மாதங்களுக்குப் பிறகு, செல்வா பணிபுரிந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க, பிரபுவும் நேர்காணலில் கலந்துகொண்டான். அவனது திறமையை உணர்ந்த செல்வா, அவனுக்கான வாய்ப்பை நேர்மையாகப் பரிந்துரைத்தான். பிரபுவுக்கும் வேலை கிடைத்தது.
வேலையில் சேர்ந்த முதல் நாளில் பிரபு, “நண்பா, இன்று எனக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக உனக்கு மனமார்ந்த நன்றி!” என்றான்.
அதைக் கேட்ட செல்வா நெகிழ்ந்து, “நன்றி சொல்ல வேண்டியது நான்தான், பிரபு! என் கஷ்டமான காலங்களில் நீ செய்த உதவிகளை நான் ஒருபோதும் மறக்கக் கூடாது. இனி உன் அன்பையும் உதவியையும் மனமாரப் பாராட்டுவேன்,” என்றான்.
அன்று முதல் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றியுணர்வுடன் அன்பைப் பகிர்ந்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)