சிறு துளியின் பெரும் பயன்!
- சு.மலர்விழி
ஓர் இனிய மாலைப் பொழுதில், பலத்த மழை பெய்து ஓய்ந்தது. தெருவெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல தெருக்களில் தேங்கியிருந்த மழைநீர் ஒன்றாகச் சேர்ந்து, சிறிய நீரோடைபோல் ஒரு தெருவின் வழியாகப் பாய்ந்து சென்றது. அந்த நீரோடை இறுதியில் ஒரு குளத்தை அடைந்தது. பெற்றோர்கள் தடுத்தும் கேளாமல், சில சிறுவர்கள் அந்த நீரில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.
அப்போது, ஒரு மரத்தின் இலையின் நுனியில் ஒரு சிறிய நீர்த்துளி வருத்தத்துடன் இருந்தது. அது சுற்றிலும் நடப்பவற்றை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இலையைத் தாங்கி நின்ற மரம், நீர்த்துளியைப் பார்த்து, “ஏன் வருத்தமாக இருக்கிறாய்?” என்று கேட்டது.
அதற்கு நீர்த்துளி, “நான் ஒரு சிறிய துளிதானே! என்னால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை?” என்று மனம் வருந்திக் கூறியது.
அப்போது மரம், “நீ வருந்தாதே! ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழியை நீ கேட்டதில்லையா? என் விதை ஒன்று இந்த மரத்தின் அடியில் உள்ள மண்ணில் புதைந்து கிடக்கிறது. அதற்கு சிறிது நீர் கிடைத்தால், அது முளைக்க உதவும். நீ அந்த விதையைச் சென்றடைவாயா?” என்று கேட்டது.
அதைக் கேட்ட நீர்த்துளி மகிழ்ச்சியடைந்தது. அது மெதுவாக இலையின் நுனியிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்து, மரத்தின் அடியில் இருந்த மண்ணில் சென்று சேர்ந்தது. மண்ணில் புதைந்திருந்த விதையை அது நனைத்தது.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த விதை முளைத்து சிறிய தளிராக வெளிவந்தது. இதைக் கண்ட நீர்த்துளி மிகவும் மகிழ்ந்தது. “நான் சிறிய துளியாக இருந்தாலும், ஒரு புதிய உயிர் வளர உதவியிருக்கிறேன்!” என்று பெருமிதம் கொண்டது.
(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம்,
மதுரை மாவட்டம்)