கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்... எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பில்லை... சுபாஷினி விளக்கம்!

Meenakshi
Jul 31, 2025,06:56 PM IST

நெல்லை:  திருநெல்வேலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுர்ஜித் என்பவரால் பட்டியலின இளைஞர் கவின் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கவின், சுர்ஜித்தின் அக்காவுடன் பழகிய ஆத்திரத்தில், அவரை ஆணவக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாக கவினின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்த வழக்கில் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  சுர்ஜித் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்களையும் கைது செய்ய கவினின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி,  அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். கவின் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.




 இந்நிலையில் கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி எங்கள் இருவருக்கும் தான் தெரியும்.  எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவு குறித்து தெரியாமல் தவறாக கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.  கவினும், நானும் உண்மையாக காதலித்தோம். 


எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் பேச வேண்டாம். 6 மாதம் கழித்து வீட்டில் கூறுமாறு கவின் சொ்லியதால், காதல் விவகாரத்தை என் தந்தையிடம் சொல்லவில்லை. வீட்டுக்கு பெண் கேட்க வருமாறு சுர்ஜித்தான், கவினை அழைத்தான்.கவின் கொலைக்கும் எங்கள் அப்பா அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்களை விட்டுவிடுங்கள். இந்த சூழலில் என்னுடைய உணர்வுகளுக்கும், நான் என்ன நினைக்கிறேன் என்பதற்கும் மதிப்பளியுங்கள் என கூறியுள்ளார்.