Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!

Su.tha Arivalagan
Sep 29, 2026,10:54 AM IST

- எழுத்தாளர் சுசரிதா


நம்மைச் சுற்றிலும் மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்ந்து அனுபவித்துமுடித்து, ஓய்ந்துபோய் விழிப்பில்லா நீண்ட நித்திரையில் கரைந்து போனவர்கள் எண்ணிலடங்கா. 


வாழ்வை முழுமையாய் அனுபவிக்காது கிடைத்தற்கரிய மானுட பிறவியில், அற்பாயுள் அகால மரணம் போன்றவை மிகத் துயரமான துரதிஷ்டம் தான். அப்படியான ஈடு கட்ட இயலாத இழப்புகள் எவருக்கும் நிகழக் கூடாது. 


ஆனால் ஐம்புலன்களால் ஆனவரை உலக இன்பங்களை அனுபவித்து, ஆசைப்பட்டதெல்லாம் உண்டு,  உறங்கி, காமம் சுகித்து, வாரிசுகள் உருவாக்கி, மகிழ்ந்து, உழைத்து, சாதித்து, ஊர் சுற்றி, பல அனுபவங்களைச் சேகரித்து, இழப்புகளைச் சந்தித்து விழுந்து, எழுந்து, துக்கித்து, நோய் வாய்ப்பட்டு, மாளாத வைத்தியம்செய்துகொண்டு. . 

அப்போதும் இந்த வாழ்வு போதும்! போதும்! என்ற நிறைவு மட்டும் பலருக்கும் வருவதில்லை. இன்னும் சில காலம் வாழ வேண்டும், இதைப் பார்த்துவிட்டு போகலாம், அதைப் பார்த்துவிட்டு போகலாம் என்று மனம் நிறைய ஆசைகளை அடுக்கிக் கொண்டே வாழும் மனிதர்கள் நிறைந்த பூமி இது. 




வைத்தியம் அதிநவீனமாய் முன்னேறி விட்ட சமூகத்தில் அனுதினமும் நிரம்பி வழிவது மருத்துவமனைகள் தான். உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனியாய் சிகிச்சை செய்து, உணவை விட அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு, உயிரை மட்டும் தக்கவைத்து அர்த்தமில்லாமல் ஜீவிப்பவர்களை இன்றைக்கு மிக அதிகமாக காண முடிகிறது. 


மரணம் பற்றிய பயமும், வாழ்வின் மீதான பற்றுதலும் தகர்த்தெறிந்து, இயற்கையிலிருந்து வந்தோம் இயற்கையில் சரணடைகிறோம்! என்ற மனமுதிர்ச்சி கொண்டவர்கள் வெகு சிலரே.  'இயற்கை எய்தினார்' என்ற சொல்லின் பொருள் எல்லோருக்கும் புரிவதில்லை. 


விடமாட்டேன்.. உன்னைப் போக விடமாட்டேன்.. என்று மரணத்தின் வாயிலில் நிற்கும் பிரியமான உறவுகளை பிரிய மனமில்லாமல் நவீன மருத்துவத்தைக் கேடயமாய் பிடித்துக் காலனிடம் மல்லு கட்டும் மனிதர்கள் ஏராளம். 


அவர்களை விடுங்கள், நிம்மதியாகப் போகட்டும். இறுகப் பற்றி விடாப்பிடியாகப் போராடி, உலகம் உள்ளவரை வாழவைத்து இயற்கையை வென்றுவிட முடியுமா என்ன? நம்முடைய நேரம் வரும்போது நாமும் போக தானே வேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை. 


வாழ்வின் பல காலம் அந்த உறவோடு வாழ்ந்து பழகிவிட்டோம் என்பதாலும், அவர்கள் இன்றி நம் வாழ்வு என்னவாகும் என்ற சுயநலத்திலும், போகின்ற உயிரை இன்னும் சில நாட்கள் இழுத்துப் பிடித்து இம்சிப்பதில் என்ன பொருள் இருக்கக்கூடும்?


நரை திரை பிணி மூப்பு சாக்காடு.. மனித வாழ்வின் இயல்பல்லவா! பிறப்பதெல்லாம் மரணித்தே தீர வேண்டும். பிறக்காவிடில் மரணம் இல்லை என்பதால் தான், பிறவா வரம் வேண்டும் என்றும், பற்றற்று இரு! என்றும் மதங்கள் சொல்கின்றன. 


தனியே வந்தோம், தனியே தான்  போகப் போகிறோம். இதைத்தான், வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? என்று கவிஞன் எழுதிச் சென்றான். எழுதியவனும் சென்றான். 


வாழும் காலத்தில் ஆனந்தமாய் வாழ்வை அனுபவிப்பதைப் போலவே, முடிவு நெருங்கும் காலத்தில், தப்பிக்க இயலா நிதர்சனம் மரணம் என்பதை ஏற்கும் மனப்பக்குவம்  வேண்டாமா! 


வாழ்ந்து அனுபவித்துவிட்ட பிறகு மரணத்துக்குத் தயாராவதில் என்ன தவறு இருக்க முடியும்? இதனால் மரணத்தையும் ஒரு பேரானந்த அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும். 


எல்லா மரணமும் துக்ககரமானது அல்ல என்பதாலேயே இந்தத் தமிழ்ச் சமூகம் மரண நிகழ்வை கூட ஆட்டம் பாட்டதோடு கொண்டாடியது. கல்யாணச் சாவு என்று கூட பெயர் சொல்லியது.


ஒவ்வொரு உயிருக்கும் மரணம் வலியில்லாது நிகழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரம், போகின்ற உயிர், வலி வேதனைகளை அனுபவித்துக் கொண்டு மருத்துவமனைகள்  மருந்து மாத்திரைகள் என்று பெயரளவில் வாழும் நாட்களை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க..  உயிரோடு இருக்கிறார் என்ற உறவுகளின் ஆறுதலுக்காக மட்டுமே வாழும் பொழுது, வாழ்வின் நோக்கமே தொலைந்து போகிறதல்லவா! 


இதன் பொருள், தானே உயிரை மாய்த்துக் கொண்டு போக வேண்டும் என்பதல்ல. மரணத்தை நினைத்து நினைத்து பயந்து சாக வேண்டாம், அதுவே வாழ்வின் உச்சம், அது அருகில் வரும்போது வருத்தமின்றி ஆனந்தமாய் ஏற்றுக் கொள்ளலாம் என்பதுதான். 


- இருக்கிறேன், உணர்கிறேன் என்று வாழ்வது எத்தனை இன்பமோ, மரணம் தரும் ஆழ்ந்த பேரமைதியும் இன்பம் தான் என்று உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான்.


மரணம் முடிவல்ல, மறுபிறப்புக்காண துவக்கம் என்ற மதம் சார்ந்த கருத்துக்கு உடன்பட்டாலும் இல்லாவிட்டாலும், இறப்பு என்பது உடலுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்டு, தோன்றிய மூலத்திலேயே ஐக்கியமாவது என்ற புரிதல் மரண பயத்தைப் போக்கும் அருமருந்தாகும்.