ஏன் இத்தனை செயற்கை கருத்தரிப்பு மையங்கள்.?

Su.tha Arivalagan
Feb 18, 2026,01:06 PM IST

- அ. வென்சி ராஜ்


இப்படி ஒரு தலைப்பிற்கு கட்டுரை  எழுதுவேன் என கனவிலும் நினைத்ததில்லை. உண்மையில் இந்த பதிவை மனவேதனையோடும். வருத்தத்தோடும், இரண்டு மகன்களை பெற்ற தாயாகவும், சமூகத்தை கட்டமைக்கும் ஆசிரியராகவும் ஒருவித பயத்தோடே  எழுதுகிறேன்.


இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையா? இதற்கு ஏன் இவ்வளவு அலங்கார வார்த்தைகள் என நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. சொல்கிறேன் கேளுங்கள்..


சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக நாம் சில வசனங்களை அரசு மருத்துவமனைகளிலும்,  பொது சுவர்களிலும், ஆட்டோக்களிலும், பேருந்துகளிலும், லாரிகளின் பின்புறமும் பார்த்திருக்கலாம். அதாவது.... "நாம் இருவர்; நமக்கு இருவர்" அதன் பிறகு "நாம் இருவர்; நமக்கு ஒருவர்" போன்ற வசனங்கள் நம் கண்களில் படாமல் இருந்திருக்காது. 

அதே நாற்பது ஆண்டுகளுக்கு முன்னதாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் , மருந்தாளுனர்களுக்கும் "குடும்ப கட்டுப்பாடு" பற்றி  தெரியாமல் இருந்திருக்காது.  




நம் முன்னோர்கள் அதாவது  நம் தாத்தா, பாட்டி , கொள்ளு தாத்தா இவர்களுக்கு 10 , 12 குழந்தைகள்  இருந்தார்கள் என்பது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இன்று நிலைமை என்ன? 12 குழந்தைகள் 15 குழந்தைகள் பிறந்த குடும்பத்தின் வாரிசுகள் இன்று தங்களின் வாரிசுகளுக்காய் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நோக்கி தவம் கிடப்பது ஏன்?  என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா.. 


2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது நினைவிருக்கிறதா? செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பற்றி கூறுவதாக சொல்லிவிட்டு இப்பொழுது ஏன் ஜல்லிக்கட்டு பற்றி விசாரிக்கிறீர்கள் என்பது தானே உங்கள் கேள்வி.. ஆம்.  இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நம்ப முடிகிறதா? 


நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. சற்று முந்தைய காலத்தைப் பற்றி பேசுவோம். ஒரு காலத்தில் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் நாட்டு பசு மாடுகள் இருக்கும். அவை கருவுற வேண்டும் என்றால் இயற்கை முறையில் கருவுறச் செய்வார்கள். ஆனால் இன்றைய நிலைமை பசுக்கள் கூட செயற்கை முறையில் கருத்தரிப்பதைப்  பார்க்கின்றோம். அது மட்டுமா. .? உணவே மருந்தாய் இருந்தது போய் இன்று உண்ட உணவிற்கு மருந்து எடுக்கும் அளவிற்கு  உணவு முறையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறைக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகள், காய்கறி, பழங்கள், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என அடுக்கிக் கொண்டே போகலாம் நம் வாழ்வியலை மாற்றிய அறிவியல் முன்னேற்றங்களை. ..


அக்காலத்தில் நமது  வீடுகளில்  நான்கு  முதல் 12 குழந்தைகள் என்று மழலைச் செல்வத்திற்கு பஞ்சமின்றி இருந்தது.. அதுவும் எப்படி?  அரசாங்கம் மக்கள் தொகையின் பெருக்கத்தைக் குறைக்க குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வரும் அளவிற்கு.. ஆனால் இப்பொழுது நிலைமை, நாம் இருவர் நமக்கு இருவர் என்பது மாறி, நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பதும் போய்  நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தைகள் என்னும் நிலை வந்து விட்டது. காரணம்  மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எனக் கூறினாலும் தம்பதியர்கள் இயற்கையாக கருவுறுதல் குறைந்துவிட்டது என்பதே உண்மை.... 


செயற்கை கருத்தரித்தல் மையங்களைப் பற்றி பேச வந்துவிட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்களே என நீங்கள் நினைக்கலாம். . இருக்கிறது. இவை  அத்தனைக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த செயற்கை கருத்தரித்தல் மையங்கள் பெருகி வருவதற்கான காரணங்களை நாம் அடுத்த தொடரில் ஒவ்வொன்றாக காணலாம்


( சிந்திக்க இன்னும் இருக்கு....)


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)