தீபாவளி பண்டிகை எப்போது முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?

Su.tha Arivalagan
Nov 08, 2026,04:10 PM IST
- சுதா திருநாராயணன்

தீபாவளிப் பண்டிகையைப் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.

தீபாவளி என்ற சொல் வடமொழியில் இருந்து வந்தது. வடமாநிலங்களில் தீபாவளி ஐந்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தந்தேரஸ், நரக சதுர்த்தசி, லட்சுமி பூஜை, கோவர்த்தன பூஜை, மற்றும் பாயீ தூஜ் என்று சகோதரர்களின் நலனுக்காக பிரார்த்தித்துக் கொள்வது.  

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஆவளி என்றால் வரிசை. கிருஷ்ணாவதாரத்தில்தான் "தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட துவங்கியது" என்று சொல்வார்கள். கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாள், 'தீமையை அழித்த நாள்' என்று சொல்வார்கள். ஆனால், கிருஷ்ணாவதாரத்திற்கு முன் அவதாரமான ராமாவதாரத்திலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இராமர் இராவணனை வதம் செய்த பிறகு, லங்கையில் இருந்து மனைவி சீதையுடனும் சகோதரன் இலக்குவனுடனும் அயோத்திக்குத் திரும்பியவுடன் அயோத்தி நகரம் முழுவதும் தீப விளக்குகளால் ஒளிமயமாக ஜொலித்துக் கொண்டிருந்தன. அன்றிலிருந்து தீபாவளி, 'இருட்டை வெற்றி கொண்ட விழா'வாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுதான் வட இந்தியர்கள் லட்சுமி பூஜை செய்கிறார்கள். 





ஸ்ரீ கிருஷ்ணர், மனைவி சத்தியபாமாவின் உதவியுடன்தான் நரகாசுரனை வதம் செய்தார். ஏனென்றால் நரகாசுரன் ஒரு பெண்ணின் கையால்தான் வதம் செய்யப்பட வேண்டும் என்ற சாபத்தைப் பெற்றிருந்தான். பாண்டவர்கள் வனவாசம் முடிந்து வீடு திரும்பியவுடன் நகர மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து விளக்குகள் ஏற்றிக் கொண்டாடினர். அப்பொழுதிலிருந்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் ஓர் கதை இருக்கிறது.

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் குரு ஹர்கோவிந்த சிங் உடன் சேர்த்து 52 அரசர்களை குவாலியர் கோட்டையில் கைது செய்து வைத்திருந்தார். குரு ஹர்கோவிந்தர் விடுதலை ஆன பொழுது மற்ற அரசர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஜஹாங்கீரைக் கேட்டுக்கொண்டார். இந்த நாளையே தீபாவளி திருநாளாக 'சீக்'  சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.  

ஜைனர்கள் மகாவீரர் முக்தி அடைந்த நாளை தீபாவளித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். கோவாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் தீபாவளி அன்று இரவு சிலர் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர். புராணத்தில் பார்வதி தேவி தீபாவளி அன்று இரவு சூதாட்டங்களில் ஈடுபடுபவர்கள் வெல்வார்கள் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் உமையவள் ராக்ஷசனை வதம் செய்வதற்காக மகாகாளியின் அவதாரம் எடுத்தாள். ஆனால் அதற்குப் பிறகு அன்னை உமையவளின் கோபம் தணியவில்லை. இறைவியின் கோபத்தைத் தணிப்பதற்காக இறைவன் சிவனே பார்வதியின் பாதங்களில் படுத்துக்கொண்டார். சிவனின் ஸ்பர்சத்தினால் பார்வதியின் கோபம் தணிந்தது. அன்றிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் ஓர் ஐதீகம் உள்ளது.

(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)