சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?

Su.tha Arivalagan
Sep 11, 2026,12:31 PM IST

- சுதா திருநாராயணன், திருச்சி


சாலை ஓரம் எல்லாம் 

கற்கண்டு குவியல்,

ருசிக்க முடியுமோ?


வீதியோரம் எல்லாம் 

பஞ்சு மெத்தை,

படுக்க முடியுமோ?


பரந்துவிரிந்த வெண்பட்டு

சலவை போட்டது யாரு?




ஊரெல்லாம் வெள்ளை முக்காடு,

அனைவரும் பூமித்தாய்க்கு 

பணிபுரியும் செவிலியர்களோ?


அவல் அவலாய் வெடித்துப் பரவும் 

பஞ்சு சிதறல் தலைகாணிக்கு உதவாது!!!


தோட்டம் முழுவதும் உதிர்ந்து கிடக்கும் 

வெண் முத்துக்கள்!!

எடுக்கவோ கோர்க்கவோ முடியவில்லை! !!


வெண்பஞ்சு மேகம் 

அன்னை பூமியின் அரவணைப்பில் 

அமைதியாய் ஓய்வு எடுக்கிறது.

ஆதவனின் கிரணங்கள் தீண்டியதால்

புற்களின் நுனியில் 

மின்னுகின்றன வைரங்களாய் பனித்துளிகள்!!!!


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)