Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
வித்யா மிகுந்த பதற்றத்துடன் இருந்தாலும் அவள் மனம் என்னவோ முயல்குட்டியாய் துள்ளிக் கொண்டிருந்தது. புடவையின் ஃப்ளீட்ஸை அடிக்கடி சரி செய்தாள். வேறு புடவை மாற்றிக் கட்டி அலுத்து சலித்தாள். ஸல்வார் கம்மீஸ் அணிந்து பொருத்தம் பார்த்தாள். அவர்கள் இன்னும் அரை மணியில் அவர்கள் வந்து விடுவார்கள். நெற்றிப் பொட்டு கோணலாக இருப்பது போல் தோன்றியது. வட்டப்பொட்டு, திலகப்பொட்டு என்று மாற்றி மாற்றி வைத்துப் பார்த்தாள். கதவு திறந்தது. வந்தனா உள்ளே வந்தாள். “வாவ், ப்யூட்டிஃபுல், சல்வார் கம்மீஸே நன்னா இருக்கு”
விசிலடித்துக்கொண்டே சென்றாள். “ஏய், சுரேஷும் அவங்க பேரண்ட்ஸும் வந்தாச்சா?” வித்யாவின் கேள்விக்கு ”எஸ்” என்ற பதில் மிதந்து வந்தது.
“உனக்கு எல்லாம் விளையாட்டுதான்” வித்யாவின் முணுமுணுப்பு வந்தனாவின் காதில் விழவில்லை. “காஃபி, ஸ்னாக்ஸ் எல்லாம் ரெடி” என்று குயிலாய் கூவினாள், வந்தனா.
கேட்டருகில் ஓலா டாக்ஸி வந்து நின்றது. வயது முதிர்ந்த தம்பதியோடு இறங்கிய விக்நேஷ் ஜன்னல் வழியே வித்யாவைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து தலையசைத்தான். வந்தனா வாசலுக்கு ஓடி வந்து “வாங்க” என்றவாறே பெரியவர்களின் கையைப் பற்றி உள்ளே அழைத்து வந்தாள். விக்நேஷும் பின் தொடர்ந்தான். வித்யா வெளியில் வந்து கரம் குவித்தாள்.
பெரியவர் சண்முகமும் அவர் மனைவி சீதாவும் கண்ணாலேயே ஆசி வழங்கினர். சீதா மெல்ல வித்யாவின் அருகில் வந்து அவள் கையை மென்மையாகப் பற்றினாள்.
“எங்க விக்நேஷோட சேர்ந்து சந்தோஷமா நீ இருக்கணும்மா. ரெண்டு பேருமே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சுட்டீங்க. இனிமே நிம்மதியா இருக்கணும். எங்களுக்கப்புறம் விக்நேஷுக்கு யார் துணைன்னு கவலையா இருந்தோம். விக்நேஷ், வித்யா பேர் கூட எவ்வளவு பொருத்தம் பாரு” மூச்சு விடாமல் பேசினார் சண்முகம். சீதாவின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
வந்தனா அருகில் வந்தாள். “ஆண்ட்டி, மம்மியும் விக்னேஷ் அங்கிளும் நல்ல பார்ட்னர்ஸ். ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் பெஸ்ட் கம்பானியனா இருப்பாங்க. நான் அடுத்த வாரம் கல்யாணம் ஆகி யூஎஸ் போயிட்டா அம்மா என்ன செய்வாங்கன்னு ரொம்ப கவலையா இருந்திச்சு. என்னோட வுட்பீ சுரேஷ் தான் இந்த ஐடியாவை சொல்லி, மம்மியை போராடி சம்மதிக்க வச்சாரு. அதுவும் மம்மிக்கு பிடிச்ச மாதிரி விக்நேஷ் அங்கிள் ஒல்ட் ஏஜ் ஹோம் கேர்டேக்கர், தன் பேரண்ட்ஸையும் அங்கேயே வச்சு நல்லாப் பாத்துக்கிறாரு. இதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் மம்மி தன்னோட சேவை மனப்பான்மைக்கு அங்கிள் குறுக்கே நிக்க மாட்டாருன்னு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் எனக்கு சப்போர்ட்டா இருந்த சுரேஷோட பேரண்ட்ஸ்க்கு தௌஸண்ட் தாங்க்ஸ் சொன்னாலும் போறாது” பேசியவாறே அன்னை வித்யாவின் அருகில் வந்து அவள் தோளில் முகம் புதைத்தாள். வந்தனாவின் தலையை ஆதூரத்துடன் சுரேஷின் தாய் வருடினாள்.
மகளை அணைத்தவாறே வித்யா விக்நேஷை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள். அவள் உள்ளத்தில் இருந்த கலக்கம் தெளிந்து காதல் அலை அடிக்கத் துவங்கியது.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)