Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!
- சுதா திருநாராயணன்
கலிபோர்னியாவில் மகள் அகத்திற்கு வந்தாலே கார் சவாரி தான். பாட்டு ட்யூஷன், மளிகை பொருட்கள் வாங்க போகும் போது என்று அவள் காரை எடுக்கும் போதெல்லாம் நானும் ஒட்டிக் கொண்டு விடுவேன்.
உள்ளங்கால் அரிப்பெல்லாம் ஊர் சுற்றதானே. அதனால் பேத்தியின் பாஸ்கட் பால், கூடைப்பந்து டோர்னமெண்ட் பார்க்கச் சென்றேன். சிறு வயதில் கூடைப்பந்து என்றால் பந்தை கூடையில் போடுவது என்ற அளவில் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தேன். கூடை தரையில் இருக்குமா அல்லது கம்பத்தில் இருக்குமா என்று அப்போது தெரியாது. அப்புறமா விளையாட்டுக்கள் பற்றி போதுமான பொது அறிவு வந்துவிட்டது.
பாஸ்கெட் பால் டோர்னமெண்ட் பார்க்க 15 டாலர் கட்டணம். கட்டினோம், இரண்டு பேருக்கு 30 டாலர் ஜாஸ்தி இல்லை, 1448×2 ரூபாய் தான். மணிக்கட்டில் அதற்கு அடையாளமாக காகித பிரேஸ்லெட் போட்டு விட்டார்கள். அழகாகவே இருந்தது. கொஞ்சம் கலர்ஃபுல்லாக டெகொரேடிவ் ஆக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஹிஹி.
1448 ரூபாய் என்பதால் ஜாக்கிரதையாக வீடு வரும் வரை வைத்துக் கொண்டிருந்தேன். கழட்ட மனம் வரவில்லை. பேத்தி ஓடி ஓடி விளையாடினாள். நல்ல டீம் ஸ்பிரிட். நான் தான் கொஞ்சம் பேக்கு மாதிரி இரண்டு முறை எதிரணி கூடையில் பந்து போட்டதற்கு கைதட்டி ஆரவாரித்தேன்.
மகளின் கண் உருட்டலுக்குப் பிறகு கப்சிப் கமாசிமா என்று கைகட்டி அமர்ந்தேன். ஜீபூம்பா உதவி இல்லாமலேயே முதல் கேம், பேத்தியின் டீம் ஜெயித்தார்கள். இரண்டாவது கேமில் டீம் தோற்றது. கோச் பின்னர் சில பல அறிவுரைகள் கூறினார்.
உள்விளையாட்டு அரங்கம் தான். ஏசியில் அமர்ந்து பார்த்தது நன்றாகவே இருந்தது. இப்படி ஏசி கிரவுண்டு என்றால் என்னையும் ஸ்போர்ட்ஸில் சேர்த்து விடுகிறாயா என்று என் மகளை கேட்டேன். முறைத்தாள். மற்றவர்களின் புகைப்படங்களைபோஸ்ட் செய்ய அனுமதி இல்லை.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)