short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

Su.tha Arivalagan
Sep 19, 2026,05:07 PM IST

- சுதா திருநாராயணன்


நான் 1979ம் ஆண்டு திருமணமாகி திருச்சிக்கு வந்தேன். படித்தது, வளர்ந்தது எல்லாம் நாக்பூர் மற்றும் புனே மஹராஷ்ட்ராவில் - தமிழில் போஸ்டர்களையோ விளம்பர போர்டுகளையோ பார்த்ததே இல்லை. தமிழ்நாட்டுக்கு வந்த உடன் பல துணிக்கடைகளில் 20%,  30%,   50% தள்ளுபடி என்ற விளம்பரத்தை பார்த்த உடன் முதலில் புரியவில்லை. 


“படியிலிருந்து தள்ளுவார்களா?” என்று என் கணவரைக் கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு விளக்கினார்.


எனக்கு ஏற்பட்டஅனுபவம்.


சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நல்லி சில்க்ஸ்ல் “50% தள்ளுபடி ஒரு நாள் மட்டும்” என விளம்பரம் செய்திருந்தனர். அப்போது தான் திருச்சியில் நல்லி கிளை திறந்திருந்தனர்.தள்ளுபடி விலையில் புடைவைகள் வாங்க நான், எனது தோழிகள்மூவரும் முப்பெரும் தேவியர் போல ஆரவாரமாக கிளம்பி போனோம்.


கடையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாது போல் இருந்தது. கூட்டத்தை பார்த்து மூவரும் ஸ்தம்பித்து போனோம். “திரும்பி போய் விடலாமா” என்று நான் கேட்ட உடன் “வேண்டாம் வேண்டாம்” என மற்ற இருவரும் அலறினர்.  ஏனென்றால்  ஒரு நண்பி  தஞ்சாவூரிலிருந்து இதற்காகவே வந்திருந்தாள். பிறகென்ன! களத்தில் இறங்கி விட்டோம்!




அலை கடலென திரண்டு வந்திருந்த  பெதும்பை முதல் பேரிளம் பெண் வரையான அனைத்து பருவத்தினரையும்

தாண்டி, ஜன சமுத்திரத்தில் நீந்தி, புடைவை துணிமணிக் குவியலுக்குள் புகுந்து புறப்பட்டோம். என் கணவருக்கு சாஃப்டாக இருக்கும் சிந்தெடிக் புடைவைகள் அதிகம் பிடிக்கும் என்பதால் நான் அந்த மாதிரி புடைவைகள் செக்‌ஷனில் செக் இன் செய்து நான்கு அருமையான புடைவைகளை தேர்ந்தெடுத்து விட்டேன். (அப்போதெல்லாம் கணவர் பேச்சை கேட்பது போல் நிறைய நடிப்பேன். ஆனால் இப்போது எங்கள் இரு பெண்களும் திருமணமாகி புக்ககம் சென்று விட்ட நிலையில் நான் அவர் பேச்சையும், அவர் என் பேச்சையும் கேட்பதை தவிர வேறு வழியில்லை) 

O K  மேட்டருக்கு வருகிறேன்.   மற்ற இருவரும்  கூட்டத்தில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்போது மொபைலும் கிடையாது. எனக்கு ஒரே தவிப்பு.  நான் வாங்கிய ப்ளு கலர் புடைவையை அவர்கள் பார்க்க வேண்டாமா?! ஒரு வழியாக அவர்களும் புடைவைகளை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தனர். இருவரும் வாங்கியிருந்த புடைவைகள் சூப்பரோ சூப்பர்!  சும்மா சொல்லக் கூடாது,  அன்று வாங்கிய புடைவைகள் பல வருடங்கள் எங்கள் மேனியை அலங்கரித்தன. 


நான் வாங்கியிருந்த  நீலக் கலர் புடைவைக்கு  என் தோழி  வழுக்கற புடைவை என்று பெயர் வைத்து “உன் கணவர் அதுல வழுக்கி விழுந்தாரா?” என்று என்னை கலாட்டா செய்து கொண்டே இருந்தாள். கிட்டத்தட்ட மூவரும் ஆளுக்கு ஏழெட்டு புடைவைகள் வாங்கியும் பட்ஜெட் ரூ 2000த்தை தாண்டவில்லை. மூவரும் பர்ச்சேஸ் செய்த களைப்பு தீர ஹோட்டலுக்கு சென்றோம். அரட்டை அடித்துக் கொண்டே, மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி விட்ட பெருமையில் பூரித்து பூரி மசால், காஃபி எல்லாம் ஒரு கை பார்த்தோம்.


பில்லை செலுத்திவிட்டு என்னமோ உலகமே எங்கள் காலடியில் கிடப்பது போன்ற இறுமாப்போடு ஹோட்டலை விட்டு வெளியே வந்து ரோடை கிராஸ் செய்து பஸ் ஸ்டாண்டிற்கும் வந்து விட்டோம். யாரோ எங்களை நோக்கி வருவது தூரத்தில் தெரிந்தது. “அது யாரு பார்த்துக் கொண்டே ஓடி வருவது?” என்றாள் தஞ்சை தோழி  அசட்டையாக. அருகில் அந்த நபர் வந்த உடன் தான் யாரென்று தெரிந்தது. ஹோட்டல் சர்வர்.




அவர் கையில் எங்களில் ஒருவரின் புடைவைகள் இருந்த பிக் ஷாப்பி  பை. பை பையாக நிறைய தூக்க

வேண்டாம் என்று இரண்டு மூன்று பைகளை ஒன்றாக போட்டு வைத்திருந்தோம். டிஃபன் சாப்பிட்ட ஜோரில்

ஹோட்டலில் விட்டு விட்டு வந்து விட்டோம். “ என்னம்மா பையை விட்டுட்டு வந்துட்டீங்க” என்றவாறே

பேகை எங்களிடம் கொடுத்தார். மூவருக்கு கலம் கலமாக அசடு வழிந்தது. 


“ரொம்ப தாங்ஸ்” என்று கூறி பையை வாங்கிக் கொண்டோம்.  “இனிமேலாவது நாம கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமா?” என்றாள் என் தோழி . மற்ற இருவரும் ஆமோதித்தோம். வீட்டிற்கு வந்து சேர்ந்து மாமியார் மற்றும்  எல்லோரிடமும் புடைவைகளை காட்டி மகிழ்ந்தோம். இன்றும் நாங்கள் சிறந்த நண்பிகள்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)