"சார் எங்க அப்பாவைக் காணோம் சார்.. ஏய் ரயிலே நில்லு போகாதே..!!

Su.tha Arivalagan
Aug 26, 2026,12:23 PM IST

- சுதா. திருநாராயணன்


பலர் பர்ஸ், சாவி, முக்கியமான டாகுமெண்ட், பாஸ்புக், பாஸ்போர்ட் போன்றவற்றை தொலைத்துவிட்டு

பிரம்ம பிரயத்தனம் செய்து மீட்டிருப்பார்கள். நான் 27.6.2012 புதன் கிழமை அன்று மாலை திருச்சி ரயில்வே

ஸ்டேஷனில் தொலைந்து போன என் 90 வயதான தந்தையை மீட்டெடுத்தது ஓர் சுவாரசியமான அனுபவம்.


நான், என் தாயார் (வயது 83), என் தந்தை (வயது 90) மூவரும் பெங்களூரில் உள்ள என் தங்கையின் பெண்ணின்

திருமணத்திற்கு செல்வதற்காக மயிலாடுதுறை மைசூர் விரைவு வண்டியில் பயணிப்பதற்காக ப்ளாட்ஃபார்ம் எண்

மூன்றுக்கு குறித்த நேரத்திற்க்கு முன்பே வந்து விட்டோம். அம்மா கைத்தடி ஊன்றி மிக மெதுவாக நடப்பாள்.


அப்பா நேர் எதிர். இன்னமும் சைக்கிள் ஓட்டுவதால் நடந்தாலும் சைக்கிள் வேகம் தான். எங்கள் கோச் “எஸ் 6”.

அதற்கான உரிய இடத்தில் நடைமேடையில் தயாராக நின்று கொண்டிருந்தோம். ரயில் வந்தது. எஸ் 6 எங்களைத் தாண்டி வெகு தூரம் சென்றது. பயணிகள் வேகவேகமாக தங்கள் பெட்டியில் ஏறத் துவங்கினர். நான் அம்மா அப்பாவிடம் கூறினேன் “நான் போய் கோச்சில் லக்கேஜை வைத்து விட்டு வருகிறேன். நீங்கள் இருவரும் மெதுவாக

வாருங்கள்” என்று சொல்லிவிட்டு எல்லா லக்கேஜையும் இழுத்துக் கொண்டு (வீல் பெட்டி) சிறிது வேகமாக சென்றேன்.




ப்ளாட்ஃபார்ம் நடுவில் பெரிய பெரிய மீன் பார்சல்கள். மீன் வாடையோடு அவற்றிலிருந்து கசிந்த நீர் வேறு வழுக்கி விட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. திரும்பி பார்த்து ஜாக்கிரதையாக வரும்படி பெற்றோரை

எச்சரித்து விட்டு நான் எஸ் 6 ல் ஏறினேன். லக்கேஜை வைத்து விட்டு திரும்பி வந்தால் அம்மா மட்டும் வருகிறாள்,

அப்பாவைக் காணோம். அப்பா எங்கே என்றால் "உன் பின்னாலேதான் வந்தார்" என்றாள் அம்மா. 


சரி, பெட்டியில் ஏறி இருப்பார் என்று பார்த்தால் அங்கும் காணவில்லை. அம்மாவை மெதுவாக கம்பார்ட்மெண்டில் உட்கார வைத்து விட்டு மீண்டும் ப்ளாட்ஃபாரத்தில் இறங்கி தேடினேன். பயனில்லை. எனக்கு லேசாக கிலி பிடித்தது. பரவாயில்லை, யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று பலங்கொண்ட மட்டும் 'அப்பா அப்பா' என்று கூவினேன். இப்போது பலர் திரும்பி பார்த்தனர். வண்டி கிளம்பிவிடுமோ என்ற பயம் வந்து விட்டது. 


அம்மா வேறு ஜன்னல் வழியாக கவலை தோய்ந்த முகத்துடன்... இரண்டு போலீஸ்காரர்கள் வந்தனர். அவர்களிடம் தந்தி மொழியில் என் அப்பா, ப்ரௌன் பாண்ட், கறுப்பா இருப்பார், 90 வயசு காணோம் என்றேன். ஒருவர் “எங்கம்மா

போயிருப்பார்? இங்கதான் இருப்பார்” என்றார். “தேடித் தாங்க சார் ப்ளீஸ்” என்ற என் வேண்டுகோளுக்கு நாங்க இப்ப ட்யூட்டில இல்ல” என்ற பதில் வந்தது. ஒரு பெண் போலிஸும் இதையே கூறினாள். “அப்போ நீங்க எதுக்கு இருக்கீங்க?” என்று கேட்டு விட்டேன்.


“மேடம், 90 வயசானவரை நீங்க தான் கையை பிடிச்சு அழைச்சிட்டு வரணும்” என்றார் போலீஸ்காரர். “சார், எஸ் 6 கோச் தள்ளி வந்ததுக்கு யார் காரணம்” என்று போலிசுடன் குட்டி சண்டை வேறு. அதற்குள் ஒரு பயணி டிக்கெட்  பரிசோதகரிடம் சொல்லும் படி அறிவுறுத்தினார். “அன்னௌன்ஸ் பண்ணுவாங்க” என்றார். பிஸியாக இருந்த டிடிஆரின் தோளைத் தட்டி “ சார் சார் எங்க அப்பாவை காணோம் சார். எஸ் 6 ல ஏறணும் சார். 3 டிக்கெட் ரிசர்வ்டு சார். அன்னௌன்ஸ் பண்ணுங்க சார்.” என்று கெஞ்சலாக கூறி விட்டு, கோபமும் அழுகையுமாக “எங்கப்பா இல்லாம

இந்த வண்டி கிளம்பக் கூடாது சார்” என்றேன் ஆத்திரமாக. அவர் அதற்கெல்லாம் மசிபவராக தெரியவில்லை.


"மேடம், அன்னௌன்ஸ் செய்ய முதல் ப்ளாட்ஃபார்ம் போகணும்” என்று தயங்கினார். “சார், ஃபோன் பண்ணி

சொல்லலாமே”  என்றேன். எனக்கு உண்மையிலேயே என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பாவுக்கு

ஸ்ரீரங்கத்திற்கு திரும்பி போகக்கூட தெரியாது. மேலும் வேறு கம்பார்ட்மெண்ட் ஏதாவதில் ஏறியிருந்தால்

என்ன செய்வது? அம்மா “ நான் இறங்கி விடட்டுமா ?” என்கிறாள். அய்யோ சாமானெல்லாம்

இறக்கணுமே! 


அப்பாவிடம் மொபைலும் கிடையாது. அம்மாவிடம் கம்பார்ட்மெண்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ப்ளாட்ஃபாரத்தின் மறு கோடியை நோக்கி ஓடினேன். அப்பாடா! அப்பா எஸ் 10 கோச்சிலிருந்து வந்து கொண்டிருந்தார். "ஹையா! அப்பா வந்தாச்சு"  என்று நான் கூவாத குறை தான். தர தர என்று அவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து எஸ் 6ல் ஏறவும் வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.


திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை கண்டு பிடித்த மகிழ்ச்சி எனக்கு. அப்பா சொன்னார் “ "உன்ன மாதிரியே இருந்தது. திடீர்னு பாத்தா உன்னக் காணோம். நேர போயிட்டேன்” என்றார்.


இது ஒரு பாடம்.


இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள கம்பார்ட்மெண்டில் ஏறி விட்டு பின்னர் வெஸ்டிப்யூல் மூலம் நம் இடத்திற்கு செல்வதே உசிதம். ட்ரெய்னில் பிறகு வந்த டிக்கெட் பரிசோதகர் என் அம்மாவிடம், “ நல்ல

அமர்க்களம் பண்ணிட்டாங்க உங்க பொண்ணு” என்றார். 55 வயதானாலும் சிறிது நேரம் காணாமல் போய்

கிடைத்த தந்தையை பார்த்த உடன் சிறு குழந்தையைப் போல் மனம் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தது.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)