Egypt Tour Diary: பேசும் சிலை!
- சுதா திருநாராயணன், திருச்சி
"எகிப்து போக போறேன்" என்றேன்.
"வாட்? " என்றார் கணவர்.
"ஆமாம் வெயில் வாட்டி எடுக்குமாம் அங்கே " என்றேன் பதிலுக்கு.
"உயிருள்ள மம்மியா இருக்கே, அங்கே போய் காஞ்ச மம்மியா ஆயிடுவே" என்று என்னை வாயார வாழ்த்தினார்.
"பணம் கட்டணும். பேங்க் போறேன்." என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் என்னுடைய பேட்டரி சைக்கிளில் பறந்தேன் பேங்கிற்கு. என்னுடைய வெயிட் தாங்காமல் கொஞ்சம் கீச்சு மூச்சு என்று அலறியது சைக்கிள்.
ஸ்ரீரங்கத்தில் சைக்கிள் மாமி என்ற பெயருடன் பாப்புலர் மாமி நான்தான். செப்டம்பரில் ஈஜிப்ட் செல்வதற்கு மார்ச் மாதமே பணத்தை கட்டி விட்டேன்.
அதன் பிறகு சந்திப்பவர்கள் எல்லோரிடமும் எகிப்து செல்கிறேன் என்று தம்பட்டம் அடிப்பது என்னுடைய வாடிக்கையாகிவிட்டது. சிலர் என்ஜாய் என்றார்கள். பலர் காதில் இருந்து புகை வந்தது.
"அமெரிக்கா, பாலி, கம்போடியா, எகிப்து ....உலகம் சுற்றும் வாலிபி நீங்க" என்றார் ஒருவர் உஷ்ணப் பெருமூச்சு விட்டுக் கொண்டே.
"ஈஜிப்டா? அது எங்கடி இருக்கு கோந்தே?" என்றார் பட்டம்மா பாட்டி. அவருடைய கூர்மையான பார்வை என்னைத் துளைத்தது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் பாட்டிக்கு மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தாலே எதிரில் இருப்பவரை அடையாளம் தெரியாது.
"கோடி வீட்டு ராகவனா நீ? " என்றாள் ஒருமுறை நான் ஸல்வார் கம்மீஸ் அணிந்து கொண்டிருந்த போது.
அங்கு வந்த பாட்டியின் பேரன் "பாட்டி, ஈஜிப்டு வேர்ல்ட் மேப் அட்லாஸ்ல இருக்கும்." என்றான்.
"போடா அபிஷ்டு, மேப்ல எல்லா தேசமும் இருக்கும். அதுக்காக மேப் மேல நடந்தா எகிப்ட் வந்துடுமா?"
"பாட்டி பிளேன்ல தான் போகணும்" என்றேன்.
அதன் பிறகு தினமும் எகிப்து கனவுகளுடன் சஞ்சரித்துக் கொண்டேதான் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
அந்த நாளும் வந்திடாதோ என்று அந்த நாளும் வந்து விட்டது.
"முதுமக்கள் தாழி ஒண்ணு வாங்கிட்டு வா" என்று கூறி வழி அனுப்பி வைத்தார் கணவர்.
சூரியனின் கூரிய பார்வை எகிப்தில் தான் அதிகம் விழுகிறது. வெயிலோனின் வெப்பத்தின் சீற்றத்தை பொருட்படுத்தாத மக்கள். பிரமிடுகளின் தேசம் என்று அழைக்கப்படும் நாடு. சென்னை, மஸ்கட், கெய்ரோ ஏர்போர்ட்டுகளில் நிறைய நடந்து கால் வலி எடுத்து விட்டது.
ஏர்போர்ட்டுக்கு வந்த ஏசி பஸ் எங்கள் முப்பது நண்பர்களையும் அலேக்காக அலுங்காமல் குலுங்காமல் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. சாப்பாடு சாப்பிட்டு விட்டு தங்கும் ஹோட்டலுக்கு சென்றோம். வெல்கம் ட்ரிங்க் புளிப்பும் துவர்ப்புமாக இருந்தது.
அறையில் மெத் மெத் மெத்தை. நிறைய இடங்களை சுற்றிப் பார்த்து போட் வேன் பஸ் கப்பல் எல்லாவற்றிலும் பயணித்து பலூனில் ஆனந்தம் ஆனந்தம் என்று பாடிக் கொண்டே பறந்து நைல் நதியின் அழகை கண்ணாரப் பருகி மறக்க முடியாத நினைவுகளை சுமந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று வந்தேன் நான்.
கடைசியாக கெய்ரோ மியூசியம். எங்கள் கைடு எங்களுக்கு ஓர் ஹெட் போன் தந்தார். "இதை காதில் பொருத்திக் கொள்ளுங்கள். நான் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லிக் கொண்டே வருவேன் " என்றார். குழு தலைவர் கூறினார். "நீங்கள் கூட்டத்தோடு இருங்கள். கைடு எங்கிருந்து பேசினாலும் உங்கள் ஹெட் போனில் கேட்கும். அதனால் நீங்கள் அவர் அருகில் இருப்பதாக நினைத்துக் கொண்டு விடுவீர்கள். நம் குழுவை விட்டு தனியே சென்று விடாதீர்கள்" என்று கூறினார்.
நானும் சரி சரி என்று மண்டையை ஆட்டினேன். தங்க அரியணை, எகிப்து ராஜாக்கள் அணிந்த ஆபரணங்கள், மம்மி அற்புதத்தின் எல்லைக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.
மிக அழகான சிலை ஒன்று என்னை வாவென்று அழைப்பது போல் இருந்தது. மெல்ல அருகில் சென்றேன். "என்னுடன் வருகிறாயா? " மெல்லிய இனிமையான குரல் கேட்டது. சிலையும் பேசுமோ? ஒரு கணம் மயங்கினேன். அருகில் கலகலவென சிரிப்பொலி கேட்டது. வழிகாட்டியிடமிருந்து ஸ்பீக்கர் மைக்கை வாங்கி ஒரு தோழி செய்த குறும்பு. அசடு வழிந்தாலும் குபீரென நானும் சிரித்தேன். மறக்க முடியாத அனுபவம்.
எண் திசை மரபு நடை என்ற குழுவினருடன் இந்த எகிப்து சுற்றுலாவிற்கு சென்று வந்தேன். மிக அருமையான சுற்றுலா குழு. என்னை போன்ற மூத்த அங்கத்தினர்களை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். படகுகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் மிகவும் பத்திரமாக கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். மிகவும் முதல் தரமான ஹோட்டல்களில் தங்க வைத்து அருமையான சைவ சாப்பாடு அளித்தனர்.
ஒரு சென்ட் விற்கும் விற்பனை நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நறுமணமான செண்ட்டுகளை அவர்கள் எங்களுக்கு கைகளில் தடவி விட்டனர். சிலர் வாங்கினார்கள் பலர் வாங்கவில்லை நானும் அதில் ஒருத்தி. விலை மிகவும் அதிகமாக இருந்தது.
எகிப்தின் சரித்திரம் பற்றிய ஒலி ஒளி காட்சிக்கு எங்களை மாலையில் ஏழு மணிக்கு மேல் அழைத்துச் சென்றனர். ஒலி ஒளி காட்சி நடந்த இடம் வெகு தூரத்தில் இருந்தது. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நடக்க வேண்டி இருந்தது. இருள் வேறு. மை போன்று இருட்டு. ஒரு அரபுக்காரர் என் கையை இறுக்க பிடித்து முழுக்க அழைத்துச் சென்றார். என்னுடன் வந்திருந்த மற்ற வயதானவர்களையும் அதேபோல் மற்ற அரபு காரர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். மொழி தெரியாது யார் என்று தெரியாது அவர்களின் அந்த உதவி இன்றளவும் மறக்க முடியாது.
அற்புதமான வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும். அடுத்த பயணத்திற்கு தயாராகிறேன்.