நிலைத்த அமைதியும், விழிப்பும்.. எப்போதும் வழிகாட்டும் ஒளி!

Su.tha Arivalagan
Feb 24, 2026,03:29 PM IST

- தி. மீரா


அன்பே அப்பா,

உங்களது நிழல் இல்லாத நாட்கள்,

நெருப்பில் நடக்கும் கனவில் போலவே.


பொறியாளராக அரசாங்கத்தில் பணியாற்றி நல்ல பெயர்

பொறுப்பான தந்தையாக சிறந்த பணி 


இல்லத்தை இதயமாக்கி

குடும்ப நலனை மூச்சாக்கி

இறுதிவரை இருந்தது

ஆகாயம் கண்டேன்

உந்தன் மனதில்

உலகின் அதிசயம்

நீங்கள் தான்




பள்ளிக்கூட வழியில் பிடித்த கை,

இன்று என் வாழ்வின் அடித்தளமாய் ஆனது.

மழையில் நனைந்தது நான் இல்லை,

நீங்கள் என்னை நனைக்காமல் காப்பதற்கே நனைந்தீர்கள்.


நீங்கள் சிரிக்காத நாளில்,

சூரியனே மறைந்துவிடுவதை உணர்ந்தேன்.

நீங்கள் உடல் வலியோடு இருந்த நாளில் கூட,

நான்தான் பசியாயிருந்தேன் என்று வாடினீர்கள்.


உங்கள் முதுகெழும்பில் பிரச்சினை 

ஆனால் எங்களுக்கு முதுகெலும்பாக இருந்தீர்கள்.


உங்கள் மௌனம் – என் குரல்,

உங்கள் உழைப்பு – என் சுயம்.

என் ஒவ்வொரு வெற்றியிலும்,

உங்கள் விழியின் ஒளியே என் மேடைக்காற்று.


நீங்கள் கடன் வாங்கியும்,

எனக்கு புத்தகம் வாங்கிவீர்கள்.

நீங்கள் புதிய சட்டை இல்லாமல்,

எனக்கு பொங்கலுக்கு இரண்டு தருவீர்கள்.


மழைக்காலம் வந்தால்,

முதலில் எனக்கு  சட்டை –

அப்போதுதான் எனக்குப் புரிந்தது,

அன்பு என்பது சொல் அல்ல செயல்.


உங்கள் வலி பேசவில்லை,

ஆனால் உங்கள் கண்கள் எல்லாம் சொன்னது.

மறந்துவிட்டேன் பல நேரம் நான்,

ஆனால் உங்கள் நினைவு ஒரு நிமிடமும் விட்டுவிடவில்லை.


தந்தை என்ற சொல் தெய்வத்திற்கு சமம்,

உங்கள் உயிர் எனக்காகக் கழிந்ததை இன்று உணர்கிறேன்.

மன்னிக்கவும் அப்பா –

பழைய குறைகளை நினைத்து இன்று கண்கள் கலங்குகின்றன.


நீங்கள் அருகில் இல்லாவிட்டாலும்,

உங்கள் ஆசிகள் அருகே இருக்கின்றன.

நீங்கள் விட்டுச் சென்ற பாதைதான்,

இன்று என் பாதை.


நான் எழுதிய  கடிதம் இது,

ஆனால் இதில் என் வாழ்நாள் பதிவுகள் உண்டு.

தந்தையாக இருந்ததற்கும்,

தெய்வமாக வாழ்ந்ததற்கும் நன்றி.


நீங்கள் கொடுத்த ஒவ்வொரு வார்த்தையும்

 — “நம்பிக்கை”, “தைரியம்”, “உழைப்பு” — 

இன்றும் வாழும் வாசகங்கள்.

உங்கள் நிலைத்த அமைதியும், விழிப்பும், 

எப்போதும் எங்களுக்கு வழிகாட்டும் ஒளி.

அப்பா,

நீங்கள் என் முதல் ஹீரோ.

நீங்கள் என் நம்பிக்கை.

நீங்கள் என் நிழல்.

நீங்கள் என் நிலவு.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)