Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

Swarnalakshmi
Apr 26, 2025,02:42 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: சனிக்கிழமை முடியப் போகுது.. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.. வீடுகள் தோறும் கமகம கவுச்சி வாசம்தான்.. ஆனால் சைவம் சாப்பிடுவோரும் ஞாயிற்றுக்கிழமையை இதேபோல சூப்பராகக் கொண்டாட ஒரு சுப்ரீம் ரெசிப்பியோட வந்திருக்கோம்.


மீன் குழம்புக்கு டஃப்  கொடுக்கும் கத்தரிக்காய்& பலாக்கொட்டை புளிக்குழம்பு ரெசிபி தான் இன்னைக்கு செய்யப் போகிறோம். வாங்க ஃபிரண்ட்ஸ் கிச்சனுக்குள்ள போகலாம்...


தேவையான பொருட்கள்


1. கத்தரிக்காய் ஆறு நீள வாக்கில் வெட்டி தண்ணீரில் போடவும்.

2. பலாக்கொட்டை 10

3. தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன்

4. சீரகம் &சோம்பு ஒரு ஸ்பூன்

5. தக்காளி இரண்டு பொடியாக கட் செய்யவும்

6. இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன்

7. சிறிய வெங்காயம் 10 பொடியாக கட் செய்யவும்

8. பூண்டு ஆறு பொடியாக கட் செய்யவும்

9. தாளிக்க தேவையான நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை.

10. பட்டை கிராம்பு தலா நான்கு (இது தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்)

11. மல்லித்தூள் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் இரண்டு ஸ்பூன்

12. வர மிளகாய் மூன்று( உப்பு ,காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப)13.  புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கழுவி கரைத்துக் கொள்ளவும்


செய்முறை:




1. பலாக்கொட்டையை ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி, உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்.

2. பலாக்கொட்டை தோல் நீக்கவும்

3. மசாலா அரைக்க: தேங்காய் துருவல் ,சீரகம், சோம்பு ,கருவேப்பிலை, தக்காளி ,வர மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

4. ஒரு பெரிய நெல்லி சைஸ் புளி எடுத்து நன்றாக கரைத்து வடிகட்டி ஒரு பவுலில் வைத்துக் கொள்ளவும்.

5. அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு ,உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிய வெங்காயம்  ,பூண்டு, பட்டை ,கிராம்பு சேர்த்து வதக்கவும் (குறிப்பு: இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்)6.  கட் செய்த கத்திரிக்காய் சேர்க்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும் .மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மல்லித்தூள் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.

7. கத்தரிக்காய் எண்ணெயில் நன்றாக வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து , பலாக்கொட்டை  சேர்த்து , புளி கரைசல் ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.


அருமையான சுவையான கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு ரெடி சூடான சாதத்துடன் இந்த குழம்பு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.


நாட்டுக் கத்தரிக்காய் இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் தொடர்ந்து இருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.