காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

Su.tha Arivalagan
Oct 17, 2026,11:17 AM IST

சென்னை: சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனுக்கும், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்தத் திருமண உறவின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காவ்யா மாறனின் பெரியப்பாவாக புரமோஷன் ஆகிறார்.


கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி மாறனின் ஒரே மகள் காவ்யா மாறன். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார் காவ்யா மாறன்.


காவ்யா மாறனுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்து மருமகளாகிறார்  காவ்யா. ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த்தின் உடன் பிறந்த தம்பியான ரவிச்சந்தரின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான அனிருத்துக்கும், காவ்யாவுக்கும்தான் திருமணம் நடைபெறவுள்ளது.




கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து மிகப் பெரிய அளவில் பிரபலங்களைத் திருமண வரவேற்புக்கு அழைக்கத் திட்டமிட்டு வருகின்றனர். சமீபகாலத்தில் நடந்த மிகப் பெரிய திருமண வரவேற்பாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அதை விடுங்க.. காவ்யா மாறனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகப் பெரிய உறவாக அமையப் போகிறார். ஆமாங்க, பெரியப்பா முறையில் ரஜினி இனி வருவார். லதா ரஜினிகாந்த்தின் தம்பிக்கு காவ்யா மருமகள் என்பதால், லதா, காவ்யாவுக்கு பெரியம்மா முறையில் வருவார். அந்த வகையில் ரஜினிகாந்த் பெரியப்பாவாகிறார்.


ரஜினி குடும்பத்தில் கலாநிதி மாறன் சம்பந்தம் வைப்பதால் திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல் ரீதியாகவும் இந்தத் திருமணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், கலாநிதி மாறனின் குடும்பப் பின்னணி திமுக சார்ந்தது. அந்த வகையில் திமுக குடும்பத்து சம்பந்தமாகவும் ரஜினிகாந்த் வருகிறார்.


மொத்தத்தில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய அரசியல், தொழில் மற்றும் திரைக் குடும்பங்கள் ஒரே குடும்பமாக சங்கமிக்கப் போகின்றன என்பதால் அவர்களைச் சார்ந்தோர் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.