மேகதாது அணை விவகாரம்.. திட்ட அறிக்கை தயாரிக்க கா்நாடகாவுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி!

Meenakshi
Nov 13, 2025,02:07 PM IST

டெல்லி: மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


காவிரி நதி நீரின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகவின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதே போல கேளா, புதுச்சேரி போன்ற காவிரி நதிநீர் பாயக்கூடிய முக்கியமான மாநிலங்கள் சார்பாகவும் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் மிக முக்கியமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைப்பதற்கு தேவையான ஆய்வுகளை செய்வதற்கான டிபிஆர் என்ற திட்ட வரைவு அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய அரசானது கர்நாடக அரசிற்கு அனுமதி வழங்கியிருந்தது. 


அதை எதிர்த்து தான் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு மிதான விசாரணை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது என  தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.




இதனையடுத்து, மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது. எனவே, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.