தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவற்றுக்கு கருத்தடை ஊசி போட்டு விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு ஆகஸ்ட் 14 அன்று இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஆகஸ்ட் 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவில், எட்டு வாரங்களுக்குள் அனைத்து தெரு நாய்களையும் அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- தெருநாய்களைப் பிடிப்பது தொடர்பாக முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சிறு மாறுதல்கள் செய்யப்படுகின்றன.
- மிகவும் மோசமான, வெறி பிடித்த, ரேபீஸ் தாக்குதலுக்குள்ளான நாய்களைப் பிடித்து அவற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இவற்றை வெளியில் விடக் கூடாது.
- பிற தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் எங்கு அவற்றை பிடித்தார்களோ அங்கேயே கொண்டு வந்து விட வேண்டும்.
- தெரு நாய்களுக்கு சாலைகளில், தெருவோரங்களில், வீட்டுக்கு வெளியே சாப்பாடு தரக் கூடாது. இதற்காக தனி இடங்களை டெல்லி மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும். அந்த இடங்களில்தான் தெரு நாய்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
- தெருவோரங்களில் நாய்களுக்கு யாரேனும் உணவளித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எந்த இடத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க இடம் தரப்படுகிறதோ அந்த இடம் குறித்த போர்டுகளை வைக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட வார்டுகளில் உள்ள நாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாய்களுக்கு உணவளிக்கும் இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுவது குறித்து ஜூலை 28-ம் தேதி ஒரு ஊடகத்தில் செய்தி வெளியானது. இதை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 11-ம் தேதி டெல்லி-NCR பகுதியில் உள்ள தெரு நாய்களை உடனடியாக பிடித்து, நாய்கள் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. விலங்குகள் நல ஆர்வலர்கள், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் கருத்தடை செய்வது போன்ற மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த உத்தரவு குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நான் இந்த விஷயத்தை கவனிக்கிறேன் என்று கூறினார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 14-ம் தேதி இந்த அமர்வு, டெல்லி பகுதியில் தெரு நாய்கள் பிரச்சனைக்கு உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியமே காரணம் என்று கூறியது. மேலும், விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளை முறையாக செயல்படுத்தாததே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்தது. ஆகஸ்ட் 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனு மீது நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த தெரு நாய் விவகாரத்தில்தான், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை, குஜராத்தைச் சேர்ந்த ஒரு நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் ஒரு நாய்ப் பிரியர் என்று தெரிய வந்துள்ளது.
நாய்ப் பிரியர்களின் இந்தப் போராட்டங்களுக்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. குறிப்பாக நாய்களால் கடிபட்டோர் உயிரிழந்தோர் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் டெல்லி கோர்ட் தீர்ப்பை வரவேற்று கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.