ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
சூரத்: நம்ம ஊர்ல ஏடிஎம்-ல காசு வரலைனாலே டென்ஷன் ஆகிடுவோம். ஆனா, சூரத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு நடந்த கதையை கேட்டா நீங்க "அந்த ஏடிஎம் எங்க இருக்கு?"ன்னு கிளம்பிடுவீங்க!
இது இன்னிக்கு நேத்து விஷயம் இல்லைங்க.. 2017ம் ஆண்டுக்கு இந்தக் கதை போகுது. அந்த வருடம் பிப்ரவரி 18ம் தேதி சூரத்தின் உத்னா பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் கிளைக்குப் போயுள்ளார். ரூ. 10,000 எடுக்க முயன்றுள்ளார். கார்டைப் போட்டு, பின் நம்பரும் கொடுத்தாச்சு. ஆனால் பணம் வரவில்லை, ரிசிப்ட்டும் வரவில்லை. இதனால் திரும்பிப் போய் விட்டார். சில நிமிடங்களில் அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவரது கணக்கிலிருந்து ரூ. 10,000 எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பாரத்து அதிர்ச்சி அடைந்தார் அவர்.
இதையடுத்து பிப்ரவரி 21 அன்று தனது கணக்கு உள்ள பேங்க் ஆஃப் பரோடாவின் தும்பால் கிளையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. 2017 மார்ச் முதல் மே மாதம் வரை, அவர் மின்னஞ்சல் மூலம் பலமுறை தொடர்பு கொண்டு இதைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தார். அத்தோடு நில்லாமல், இந்திய ரிசர்வ் வங்கியிலும், பிற வங்கி குறை தீர்ப்புப் பிரிவுகளிலும் கூட முறையிட்டுப் பார்த்தார்.
சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் தான் பணம் எடுக்க முயன்றபோது பணம் வராமல் இருந்ததை நிரூபிக்க, சிசிடிவி காட்சிகளைப் பெறுவதற்காக எஸ்பிஐ வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், எந்த அதிகாரியிடமிருந்தும் அவருக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. இறுதியாக, டிசம்பர் 20, 2017 அன்று அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த விசாரணையின் போது, அந்த ஏடிஎம் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமானது என்றும், தங்களது பதிவேடுகளின்படி பணப்பரிமாற்றம் வெற்றி என்று காட்டுவதால், வங்கி இதற்குப் பொறுப்பல்ல என்றும் பேங்க் ஆஃப் பரோடா வாதிட்டது. ஆனால் இந்த வாதத்தை முற்றாக நிராகரித்தது நுகர்வோர் நீதிமன்றம். பணப்பரிமாற்றம் தொடர்பாக வங்கி வலுவான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கூறியது. மேலும், ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஐந்து நாட்களுக்குள் பணம் திரும்ப அளிக்கப்பட்டிருக்க வேண்டும், அதை வங்கி செய்யத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றம் பேங்க் ஆஃப் பரோடாவுக்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது
அசல் தொகையான ரூ. 10,000-ஐ 9% ஆண்டு வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். தாமதத்திற்காக ஒரு நாளைக்கு ரூ. 100 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். பிப்ரவரி 26, 2026 நிலவரப்படி, இந்தத் தாமதம் 3,288 நாட்களை எட்டியுள்ளது. இதனால் இழப்பீட்டுத் தொகை ரூ. 3,28,800 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, மன உளைச்சலுக்காக ரூ. 3,000 மற்றும் சட்டச் செலவுகளுக்காக ரூ. 2,000 வழங்கவும் வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
நமது பணம் நமது உழைப்பு.. அதைத் தவறுதலாக எடுத்த பிறகு திரும்பக் கொடுப்பதில் காட்டப்படும் அலட்சியத்திற்கு சரியான தண்டனை இது என்று பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.