ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
பாங்காக்: முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் நடித்திருப்பார்.. இப்போது நிஜத்திலும் அது போல நடந்துள்ளது.. ஆனால் இது முதல்வர் இல்லை.. மாறாக பிரதமர் பதவி.. நடந்திருப்பது தாய்லாந்தில்.
பிரதமர் பயோங்டார்ன் ஷினவத்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஒரு நாள் மட்டும் ஆக்டிங் பிரதமராக பதவி வகித்துள்ளார் துணை பிரதமர் சுரியா ஜுங்ருங்ரேங்க்கிட். தற்போது இடைக்கால பிரதமராக பூம்தம் வெச்சயாச்சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
பயோங்டார்ன் ஷினவத்ரா, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள். அவர் கம்போடியாவுடன் நடந்த ஒரு ராஜதந்திர பிரச்சனையில், அமைச்சர் பதவிக்குரிய ஒழுக்கத்தை மீறியதாக நீதிமன்றம் சந்தேகித்தது. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த பிரச்சனைக்கு காரணம், கசிந்த ஒரு ஆடியோ பதிவு. அதில் பயோங்டார்ன், கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னை "மாமா" என்றும், தாய்லாந்து ராணுவ தளபதியை "எதிராளி" என்றும் குறிப்பிட்டிருந்தார். மே மாதம் நடந்த ஒரு எல்லை தாண்டிய மோதலில் இந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பின. தாய் ராணுவத்தை அவர் குறைத்து மதிப்பிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பயோங்டார்ன் ஷினவத்ராவின் சஸ்பெண்ட், அவரது குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை மேலும் குறைத்துள்ளது. அவரது தந்தை தக்சின் ஷினவத்ரா ஏற்கனவே நீதிமன்றத்தில் அரச நிந்தனை வழக்கை சந்தித்து வருகிறார்.
சுரியா ஜுங்ருங்ரேங்க்கிட், தாய்லாந்தின் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமராக இருந்தார். பயோங்டார்ன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அவர் ஆக்டிங் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பிரதமரின் அலுவலகத்தின் 93வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அவரது பதவி ஒரு நாளைக்குள் முடிந்து விட்டது.
சுரியா ஜுங்ருங்ரேங்க்கிட்டுக்கு ஒரு ராசி உள்ளது. அதாவது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் சேர்ந்து விடுவார் என்று பெயர் எடுத்தவர். அவரது ஒரு நாள் ஆட்சி தற்காலிகமானது. புதிய அமைச்சரவையில் பயோங்டார்ன் ஷினவத்ரா கலாச்சார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாலும், அவரது பிரதமர் பதவி பறிபோனது ஷினவத்ரா குடும்பத்தின் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுகிறது. ஒரு காலத்தில் ஆளும் பியூ தாய் கட்சியின் முக்கிய சக்தியாக இருந்த பயோங்டார்ன், தற்போது செல்வாக்கு இழந்து வருகிறார். அவரது கூட்டணி கட்சிகளும் அவரை கைவிட்டு விட்டன.