கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

Swarnalakshmi
Oct 04, 2026,08:24 AM IST
- ஸ்வர்ணலட்சுமி

இந்த தலைப்பில் நான் இன்று தென் தமிழ் வாசகர்களாகிய அன்பு உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பது 
என் நெருங்கிய தோழியின் இரு மகள்கள் (மலர்கள் ) சுஹாசினி, ரோஷினி பற்றிய மனதை உருக்கும் கதைதான் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

சுஹாசினி ( பத்தாம் வகுப்பு), ரோஷினி (ஒன்பதாம் வகுப்பு) இருவரும் இருமலர்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே  ரோஷினி டைரி எழுதும் பழக்கம் உடையவள். சுட்டிப் பெண்களான இந்த அழகான இரு மலர்கள்  என் தோழியின் குடும்பத்து பொக்கிஷங்கள்.

இருவரும் படிப்பு, அழகு, ஒழுக்கம், அன்பு காட்டுவதில் சிறந்தவர்கள். சுஹாசினிக்கு  இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து சிறந்த பொறியாளராக ஆக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால் ரோஷினி சிறந்த மருத்துவராக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள். நான்  டாக்டர் ரோஷினி என்றுதான் ஒவ்வொரு நாளும் கூறுவாள்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ரோஷினி  காலாண்டு, அரையாண்டு,முழு ஆண்டு தேர்வு விடுமுறைகளில் பாட்டு கற்றுக்கொள்ள விருப்பப்பட்டாள். எனவே, அவள் அம்மாவிடம் சென்று, "அம்மா நான் பாட்டு கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று கூறினாள்."சரி என்று என் தோழியும் அவளுடைய விருப்பத்திற்கு இணங்க பாட்டு கிளாசில் சேர்த்தாள். நன்றாக பாடும் வல்லமை பெற்றாள் ரோஷினி. பிறகு "அம்மா நான் ஆரி ஒர்க் கிளாசில் சேர்ந்து கொள்கிறேன் என்று விரும்பினாள். இவ்வாறு எந்த விடுமுறையையும் அவள் வீணடிக்க விரும்பவில்லை.



ஏதாவது ஒன்று புதிது புதிதாக கற்றுக் கொள்ள விரும்பினாள். இதை போலவே தையல் கிளாஸ், டிராயிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ் என்று விடுமுறையை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்வாள். Olympiad exam இல் கூட தேர்ச்சி பெற்றாள். அவள் ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பில் மட்டுமல்லாது அனைத்து கலைகளையும் கற்று சிறந்த மாணவியாக திகழ்வதைப் பார்த்து அவளுடைய ஆசிரியர்களும், பெற்றோரும், அக்கா சுஹாசினியும்  , குடும்பத்தினரும், அண்டை வீட்டினரும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர்.

அதனாலோ என்னவோ கண் திருஷ்டி பட்டதுபோல் குடும்பத்தில் அந்த சுனாமி வீசியது என்று நினைக்கிறேன்.
அந்த நாள்.... ரோஷினியும், சுஹாசினியும் பள்ளியில் இருந்து வந்தவுடன், ரோஷினி, அம்மா..."எனக்கு தலை வலிக்கிறது, உடம்பு சூடாக இருக்கிறது என்று கூறினாள். காய்ச்சல் வரும் என்று நினைக்கிறேன் அம்மா என்று கூறினாள்.

உடனே என் தோழி பதட்டத்துடன் அவளை தொட்டுப் பார்த்து காய்ச்சல் அதிகமாக உள்ளது என்று அவளுடைய கணவரை அழைத்து,  என்னங்க.. ரோஷினுக்கு அதிகமா காய்ச்சல் அடிக்கிறது, உடனே மருத்துவரிடம் அழைத்துச் சொல்லுங்கள் என்று கூறினாள்."

சரி, எப்பொழுதும் குழந்தைகளுக்கு சாதாரணமாக வரும் காய்ச்சல் தானே என்று என் தோழியின் கணவரும்  ரோஷினியை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றார்.  மருத்துவரின் அறைக்குள் சென்றவுடன் அப்பா... எனக்கு ஏதோ... மயக்கமாக இருக்கிறது என்று வாய் வறட்சி அடைந்து அப்பாவின் மடியில் அப்படியே  சாய்ந்து விழுந்தாள். உடனே மருத்துவர் ஸ்டெதஸ்கோப் எடுத்து ஓடி வந்து  பார்த்த.. . அந்த நொடியே... ரோஷினியின்  உயிர் அப்பாவின் மடியிலேயே பிரிந்தது. 

அப்போதும் அவளுடைய அப்பா மயங்கி தான் விழுந்திருக்கிறாள் என் மகள் பாருங்க.. டாக்டர்... என்று மருத்துவரிடம்  கூறி கதறினார். ஆனால் டாக்டர் அவளை பரிசோதித்துப் பார்த்து விட்டு  இல்லை... சார்..  'She is no more'  என்று கூறினார். இந்த விஷயம் கேள்விப்பட்ட என் தோழி, குடும்பத்தினர் மற்றும் அனைவரும் வந்து கதறி அழுதனர்.

என் பிள்ளைக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை என்று கதறி அழுது.. அழுது...  என் தோழி அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள். ரோஷினிக்கு வைரஸ் பிரெயினில் அட்டாக் ஆகிவிட்டது என்றும் மருத்துவர்கள் கூறினராம். ரோஷினி இல்லை என்பதையே என்  தோழியின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

இதற்குத்தானோ! அவளுக்கு இத்தனை அறிவு கொடுத்தார் இறைவன். கடவுளே! என்ன? சோதனை... இது...

நாட்கள் கடந்தன.

 ரோஷினியின் ஸ்கூல் பேக் எடுத்து பார்த்து என் தோழி அழுது வியப்பில் வாயடைந்து போனாள்  .  அதில் இருந்த  ரோஷினியின் டைரியை   சுஹாசினி இடம்  காட்டினாள். இருவரும் வியப்பில் பார்த்து படித்ததும் என் தோழியும், சுஹாசினியும் திகைத்துப் போனார்கள்.

அதில் டாக்டர்.ரோஷினி எழுதுகிறேன் என்று முதல் பக்கத்திலேயே எழுதி இருந்தாள்.

ரோஷினியின் டைரியில் இருந்த வரிகள் இதோ ...
 


"உன் புத்தகங்களை மட்டும் படிக்காதே, உன் கனவை நினைவாக்கும் புத்தகங்களையும் சேர்த்து படி ".

"நீ உன் வழியில் போ உன்னை தேடி உலகம் வரும் ".

"நீ நினைப்பது என்றும் நடந்து விடாது,  எப்போது  நீ  நீயாக மாறுகிறாயோ நீ நினைப்பது நிச்சயம் நடக்கும் ".

"Your name is just filled with ordinary letters that can  only read by you, When you got success your name is filled with real letters that can read by World."

"Keep your name as a main weapon And other things are soldier for your name ".

இவற்றைப் போல நிறைய பொன்மொழிகள் இருந்தது ரோஷினியின் டைரியில். இந்த வரிகள் சுஹாசினிக்கு உத்வேகத்தை கொடுத்தது. நம்பிக்கையை கொடுத்தது. தன் தங்கை டாக்டர் ஆகவில்லை என்பதால், என்ஜினியராக ஆக வேண்டும் எனும் தன் (சுஹாசினியின் ) எண்ணத்தை, ஆசையை அவள் மாற்றிக் கொண்டாள். 

கடினமாக உழைத்து, படித்து அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் பயின்று பட்டம் பெற்றாள். 
டாக்டர் சுஹாசினி இப்பொழுது அரசு மருத்துவக் கல்லூரியில் மாஸ்டர் டிகிரி (MS O& G) (மகப்பேறியல் மற்றும் பெண்களுக்கான மருத்துவத்தில் முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர் ) பயின்று கொண்டிருக்கிறாள். 

ரோஷினியின் டைரியில் அவள் எழுதிய வரிகள் நிஜமானது. 

டாக்டர் சுஹாசினிக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள் 

ஒவ்வொருவர் குடும்பத்திலும் இதுபோல சோதனைகளும், வேதனைகளும் நிறைந்திருக்கும். ஆனாலும், நம்பிக்கை வைத்து குடும்பத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர்.

"நம்புங்கள் நல்லதே நடக்கும்"

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான கதைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.