அத்திப்பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா!

Su.tha Arivalagan
Apr 16, 2026,02:49 PM IST

சிறியவர் முதல் பெரியவர் வரை,உச்சி முதல் பாதம் வரை அனைவருக்கும் அருமையான பலன்கள் தரும் அத்திப்பழத்தின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.. அதற்கு முன் அத்தி பற்றிய சில பழமொழிகளை அறிந்து கொள்வோம்.


அத்தி பற்றிய பழமொழிகள்:


1.அத்திப்பூ   பூத்தாற்  போல்.

2. அத்தி மரத்தில் தொத்திய கனி போல் .

3. அத்திக்காயை புட்டுப்பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல்.

4. அத்திப்பூவை ஆர் அறிவார்?5.  அத்திப்பழத்தை பிட்டு  பார்த்தால்  அத்தனையும் புழு.

6.அத்திப்பழத்தை பிட்டால் அத்தனையும் சொத்தை.

7. அத்திப்போல் துளிர்த்து வாழ்ந்திருப்பர். 

8.அத்திப்பழத்தைப் பிட்டு  பார்த்தால் அதற்குள்ளும் விதை இருக்கும்.

9. அத்திப்பூவை கண்டவர் உண்டா?


இவ்வாறு அத்தி பற்றிய சுவாரஸ்யமான பழமொழிகள் வாயிலாக இதன் அறிவியல் உண்மைகளை நம் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர் .




பயிரினங்கள் பூத்துக் காய்த்து கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரங்களும் உள்ளன. இவற்றை  "கோளி" என்று பழந்தமிழர் அழைப்பார்கள். அத்தி இந்த வகையைச் சார்ந்தது. பொதுவாக அரசு, அத்தி, ஆல், பலா ஆகியவற்றை பூக்காமல் காய்க்கும் மரங்கள் என்கின்றனர்.


அத்திப்பழத்தின் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்:

 

அத்திப்பழம் நார்ச்சத்து, கால்சியம்,பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் ஃபுட்(super food) என்று அழைக்கப்படுகிறது.


1.ரத்த உற்பத்தி (ஹீமோகுளோபின்):


அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால்,ரத்த சோகையை (anaemia)போக்கும். உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.


2. இதய ஆரோக்கியம் :


அத்தி கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதயம் வலுவடைகிறது.


3. சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் :

 வைட்டமின் சி மற்றும் ஈ(vitamin Cand E),

ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால் சருமத்தை பொலிவாக்கி கருவளையங்களை குறைக்க உதவுகிறது.


4. செரிமானம் மற்றும் மலச்சிக்கல்:


அத்திப்பழம் உண்பதால் அதில் உள்ள   அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. உலர்ந்த அத்தி பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட மலச்சிக்கல் பிரச்சினை முற்றிலும் குணமடையும். இதனை இயற்கையான 'மலமிளக்கி' என்றும் கூறுவர்.

 

5. எலும்பு வலுவூட்டல்: கால்சியம்,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்பு அடர்த்தியை அதிகரித்து, எலும்புகளை வலுவாக்குகிறது. 100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு டம்ளர் பால் குடிப்பதற்கு ஈடான அளவு கால்சியம் உள்ளது. பால் பிடிக்காதவர்கள் லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள், அத்திப்பழத்தை உண்பதனால்  எலும்புகள் வலுவடைகிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், வயதானவர்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கும் அத்தி சிறந்த உணவு.


6. மூல நோய் தீரும்: அத்திப்பழச் சாறுடன் தேன் கலந்து உட்கொண்டால் மூலநோய் படிப்படியாக குணமடைகிறது.


 7.உடல் எடை குறைய:


அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கேலரிகள் இருப்பதனால் வயிறு  நிறைந்த உணர்வைத் தந்து,தேவையற்ற நொறுக்கு தீனிகளை தவிர்த்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.


சிறந்த பலன்களுக்கு இரண்டு அல்லது மூன்று காய்ந்த அத்திப்பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் அல்லது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறப்பு. இப்பொழுது அதிகமாக அனைத்து மார்க்கெட்டுகளிலும் ட்ரை ஃபிக் (dry fig) உலர்ந்த அத்தி என்று பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.


கர்ப்பிணி பெண்களுக்கு அத்திப்பழத்தின் நன்மைகள் :


கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல், ரத்த சோகை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரும்.அத்திப்பழத்தை உட்கொள்வதால்  அதில் உள்ள (folic acid)போலிக்  ஆசிட் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து, ரத்த சோகையை தடுக்கிறது. ஆனாலும் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது சிறப்பு.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.