Swarnalakshmi Writes: செப்டம்பர் 22.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா..?

Swarnalakshmi
Sep 22, 2026,10:43 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 செப்டம்பர் 22 , செவ்வாய்க்கிழமை  இந்த நாளில் என்ன என்ன சிறப்புகள் தெரியுமா?


ஆன்மீக ரீதியாக மகாவிஷ்ணுவை வழிபடும் "பரிவர்த்தினி ஏகாதசி  "அல்லது "பார்ஸ்வ ஏகாதசி "இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மற்றும் "உலக ரோஜா தினமும்" இந்த நாளில்தான் கொண்டாடப்படுகிறது.


முதலில்  பரிவர்த்தினி ஏகாதசியின் சிறப்புகளை பார்ப்போம்.


ஏகாதசி திதி தொடக்கம் :


செப்டம்பர் 21 திங்கட்கிழமை (நேற்று) 20 26 நேற்று இரவு 8:00  மணிக்கு தொடங்கியது 


திதி முடிவு :


செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை இன்று இரவு 9:43 மணிக்கு முடிகிறது.


பாரணை நேரம் (நோன்பு முடிக்கும் நேரம்) செப்டம்பர் 23,   20 26 புதன்கிழமை அன்று காலை 06: 11 மணி முதல் காலை 

 08 :36 மணிக்கு முடிகிறது.


மாதம் மற்றும் பட்சம்: 




பாத்ர பதம் மாதம், சுக்லபட்சம்.


பரிவர்த்தினி ஏகாதசியின் சிறப்பு :


இந்த நாளில் மகாவிஷ்ணுவை மனதார வழிபட்டு விரதம் இருந்து வழிபாடு செய்வதனால் குடும்பத்தில் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ வழிவகிக்கிறது.


பரிவர்த்தினி ஏகாதசியின் முக்கியத்துவம் :


சத்துர் மாச காலத்தில் பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் இருக்கும் விஷ்ணு பகவான் இந்த நாளில் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு புரண்டு படுப்பதாக நம்பப்படுகிறது. "பரிவர்த்தன்" என்றால் 'மாறுதல் 'அல்லது 'திரும்புதல் 'என்று பொருள்.இதனால் இதற்கு 'பரிவர்த்தினி ஏகாதசி' அல்லது 'பார்ஸ்வ  ஏகாதசி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நாள் மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாவிஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தை வழிபடுவது சிறப்பு.  இந்த நாளில் சிலர் உண்ணா நோன்பு இருந்து விஷ்ணு பகவானை வழிபடுவார்கள். இது பக்தர்களுக்கு நன்மைகளையும், ஆன்மீக வளர்ச்சியையும் தருவதாக ஐதீகம்.

 

பாவங்கள் நீங்கும் :


பரிவர்த்தினி ஏகாதசி நாளில் விரதம் இருந்து விஷ்ணுவையும், லட்சுமி தேவியையும் வழிபடுவதால் முற்பிறவி பாவங்கள் நீங்கி வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும். இந்த நாள் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, துளசி இலைகள், மலர்கள் மற்றும் பழங்கள் சமர்ப்பித்து  நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அதீத சிறப்பு.


இப்போது இந்த நாளின் மற்றொரு சிறப்பான " உலக ரோஜா தின"த்தின்(Worlld Rose Day) சிறப்புகளை பற்றி பார்ப்போம்.


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம்(World Rose Day) அனுஷ்டிக்கப்படுகிறது.


உலக ரோஜா தினத்தின் வரலாறு:


அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது இறுதி நாட்களில் மற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டிய மெலிண்டா  ரோஸ் அவர்களின் (Melinda Rose) நினைவாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2000 ஆண்டு முதல் கனடாவைச் சேர்ந்த இந்த 12 வயது சிறுமியை கௌரவிக்கும் வகையில் 'ரோஜா தினம்' அனுசரிக்கப்படுகிறது.


மெலிண்டா ரோஸுக்கு அரிய வகை ரத்த புற்றுநோய் இருப்பது மருத்துவர்கள் கண்டறிந்தனர். அந்த சிறுமி சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று கூறினர். அவர் ஆறு மாதங்கள்  உயிரோடு இருந்ததோடு தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் அளித்துவிட்டு  சென்றார். 


மெலிண்டா  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு தான் எழுதிய கவிதைகளை காட்டி மகிழ்ச்சி அடையச் செய்தார்.அந்தச் சிறுமி கருணை மற்றும் நம்பிக்கை இன்னும் கனடாவில் நினைவு படுத்தப்பட்டு வருகிறது..


கருப்பொருள் (Theme):




இந்த ஆண்டு 20 26 உலக ரோஜா தினத்தின்  அதிகாரப்பூர்வ கருப்பொருள் (theme) யாதெனில் "நம்பிக்கையையும் ஆதரவையும் கொண்டு வாருங்கள் "(Bring hope and support)


நோக்கம்:


புற்றுநோயை எதிர்த்து போராடும் நோயாளிகளுக்கு மனவலிமை,அன்பு, மற்றும் ஊக்கத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். மருத்துவ சிகிச்சை தாண்டி நோயாளிகளுக்கு உணர்வு பூர்வமான கவனிப்பும், சமூகத்தின் ஆதரவும் எக்காலத்திலும் தேவை என்பதை இந்த கருப்பொருள்  வலியுறுத்துகிறது.


"Rose is a rose is a rose is a rose" -   Written by an American poet and  author  Getrude Stein, in her 1913 poem "Sacred Emily".


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.