மகா திருக்கார்த்திகையன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்.. திருக்கார்த்திகை தீப சிறப்புகள்

Swarnalakshmi
Nov 23, 2026,03:22 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருக்கார்த்திகை விழாவின் உச்சத்தை நாம் நெருங்கி விட்டோம். திருக்கார்த்திகை தீப சிறப்புகள் குறித்து நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம்.


இன்று, பரணி தீபம்  எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும், நாளை மகா திருக்கார்த்திகையன்று எத்தனை, எங்கெங்கு? விளக்குகள்  ஏற்ற வேண்டும்.  என்ன ஸ்லோகம் கூற வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.


திருவிளக்கு வழிபாடு நேற்று, இன்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கி போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இந்த வழிபாட்டை "கார்த்திகை  விளக்கீடு "என்று குறிப்பிட்டுள்ளது.


எல்லா நாட்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும் கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் காலையிலும், மாலையிலும் இருவேளையும் விளக்கேற்றுவதும், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பதில் ஐயமில்லை. கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளில் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபடுவது  பெரும் யாகத்திற்க்கு நிகரான பலன் தரக்கூடியது. அவ்வாறு தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.




தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும்,ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும்  எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே  பெறலாம் . திருவிளக்கில் துர்கா, லட்சுமி,சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளன. எனவே,தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு,நெய், நல்லெண்ணெய்  நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்வதாக ஐதீகம்.


இன்று மாலை கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் வீடுகளில் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.


கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரம் அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது 'பரணி தீப' வழிபாடு ஆகும். துன்பமில்லா மரணமும், மோட்சமும்  பெற வேண்டும் என்பதற்காக, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு நற்கதியை பெற்று முக்தியை அடைவதற்கும் இன்றைய நாள் எமதர்மராஜாவை வேண்டி பரணி தீபம் ஏற்ற வேண்டும். இன்று வீட்டு வாசலில் நிலை வாசல் பூஜை அறை என அனைத்து இடங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.


பரணி தீபம் ஏற்றும் முறை என்ன?


ஒரு பித்தளை தட்டில் ஐந்து அகல் விளக்குகள் நெய் விட்டு, பஞ்சு திரி போட்டு  வெளிப்புறமாக பார்த்தபடி ஏற்றி மலர்கள் வைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்றுவது சிறப்பு. இது மகாலட்சுமியின் அருளை வீட்டில் அதிகரிக்கச் செய்யும். அஷ்ட லட்சுமிகளின் அருளையும் ஈர்க்கும். இந்த ஐந்து விளக்குகளும் இறைவனின் பஞ்சபூத தத்துவத்தை விளக்குவதாகும். எனவே பூஜையறையில் ஏற்றுவது சிறப்பு.


தவிர எப்பொழுதும் ஏற்றும் தீபங்களையும் ஏற்ற வேண்டும். துளசி மாடம், வீட்டின் வாசல் என மாலை 6:00 மணிக்கு  தீபங்கள் ஏற்றுவது சிறப்பு.விளக்கேற்றி சுவாமிக்கு நைவேத்தியமாக பால், பழம் அல்லது அவல் பாயாசம் செய்வது சிறப்பு. இன்று கார்த்திகை சோமவாரமாக இருப்பது மிகவும் விசேஷம். இன்று சிவபுராணம், கந்த சஷ்டி கவசம்,கந்தர் அலங்காரம், கந்த குரு கவசம்,வேல்மாறல், கந்தர் அனுபூதி  படிப்பதும் சிறப்பு.


நாளை, மகா திருக்கார்த்திகை அன்று 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக அமைகின்றன. மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.


முதலில் வாசலில் கோலத்தின் நடுவில் விளக்கு ஏற்றி, நிலை வாசலில் தீபம் ஏற்றிய பிறகு வெளியில் ஏற்றிய ஒரு தீபத்தை எடுத்து வந்து வீட்டிற்குள் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். பிறகு சமையல் அறையில் ,பின்புறம், துளசி மாடம் என அனைத்திடங்களிலும் விளக்கேற்றுவது சிறப்பு. வெறும் தரையில் விளக்கை வைக்காமல் வாழை இலையை  கட் செய்து அதன் மீது வைப்பது சிறப்பு.


1. வாசல் கோலத்தின் மீது 5 அகல் விளக்குகள். குத்து விளக்கை சுற்றி 5 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்.

2. நிலை வாசலில்- 2 விளக்குகள்.

3. வாசற்படி -4 விளக்குகள்.

4. திண்ணை,மாடம் அல்லது ஜன்னல் - 6 விளக்குகள்.

5. வீட்டின் ஹால் நடுவில் -2 விளக்குகள்.

6. பூஜை அறை- 2 விளக்குகள்.

7. சமையலறை- 2 விளக்குகள்.

8. வீட்டின் பின்புறம் -3 விளக்குகள்.

9. வீட்டிற்கு வெளியில் எம தீபம் -1. 


மொத்தம் 27 விளக்குகள் ஏற்றுவது சிறப்பு. அவரவர் இடவசதிக்கு ஏற்ப 11, 9, 5 விளக்குகள் எனும் எண்ணிக்கையில் ஏற்றலாம்.


என்ன ஸ்லோகம் படிப்பது:


தீப லட்சுமி துதி :


"தீபோ ஜோதி   பரம்  பிரம்ஹ   தீபோ  ஜோதி ஜனார்த்தன:

 தீபோ ஹரது மே  பாபம் ஸ்ந் த் யா   தீபோ   நமோஸ்துதே ".


பொருள் :


ஜோதி வடிவான தீபமே பிரம்மா,அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே காலை,மாலை எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ... அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய  தீபலக்ஷ்மியை  வணங்குகிறேன்.

 

அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.