ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
- ஸ்வர்ணலட்சுமி
"ஒவ்வொரு வீடும் ஒரு உலகம்". இது ஸ்பெயின் நாட்டு பொன்மொழி.
"வீடு என்பது சுவர்கள் அல்ல,அன்பு நிறைந்த ஒரு உலகம்".. இது தமிழ் பொன்மொழி.
இந்தப் பொன்மொழிகள் நிஜம் தானே. நாம் வாழும் வீடு தானே நமக்கு சொர்க்கம். அது சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் சரி, கூரை வீடாக இருந்தாலும்,ஓட்டு வீடாக இருந்தாலும்,மாடி வீடாக இருந்தாலும் நமக்கு அது தானே உலகம்.
பண்டிகை காலத்திற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்வது என்பது அனைவருக்கும் ஒரு பெரிய வேலையாக நினைப்போம். இந்த மாதம் ஆயுத பூஜை &சரஸ்வதி பூஜை, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வீட்டை எளிதாக சுத்தம் செய்யலாமா அட... வாங்க... சில டிப்ஸ் பார்ப்போம்...
1. முதலில் மேல்புறம் மற்றும் சுவர்களில் படித்திருக்கும் ஒட்டடைகளை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டடை அடிக்கும் பொழுது அலர்ஜி ஏற்படாமல் இருக்க முகத்தில் மாஸ்க் அணிவது நல்லது. டஸ்ட் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கலாம்.
2. ஒரு நாளைக்கு ஒரு ரூம் என்று பிரித்து முதலில் பூஜை அறைக்கு செல்வோம். பூஜை அறையில் உள்ள சாமி படங்களை துடைத்து,விளக்கு, மணி,ஆரத்தி தட்டு, பஞ்ச பாத்திரம் மற்றும் பூஜையில் வைத்துள்ள பித்தளை, செம்பு பாத்திரங்களை புளி அல்லது எலுமிச்சம்பழம், கல் உப்பு சேர்த்து தேய்க்கலாம். நீண்ட நேரம் தேய்க்க வேண்டி இருக்கும்.
3. அதற்கு மாற்றாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு நாமே பித்தளை கிளீனிங் பவுடர் தயாரிக்கலாம். கோதுமை மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, கல் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பித்தளை, செம்பு பாத்திரங்கள் மீது தடவ உடனே பளபளவென (அதிகம் தேய்க்க வேண்டியது இல்லை) மாறும் .
4. ஜன்னல் கண்ணாடி, ஷோகேஸ் கண்ணாடி இவற்றை துடைக்க கிளாஸ் கிளீனர் தயாரிக்க.. சோள மாவு ஒரு ஸ்பூன்,வெள்ளை வினிகர் 1/4 கப், வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு கப். இவை அனைத்தையும் சேர்த்து கிளாஸ் கிளீனர் தயாரித்து கண்ணாடிகளை துடைக்கலாம். சோளமாவில் உள்ள நுண்ணிய துகள்கள் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள லேசான அழுக்குகளில் உரசி அகற்றும். வெள்ளை வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் தாது படிவங்கள் மற்றும் அழுக்குகளை கரைத்து எளிதாக அகற்றி விடும்.
5. வீட்டில் உள்ள மேஜை, நாற்காலி, சோபா செட், அலமாரிகள், மர பர்னிச்சர்கள், ஜன்னல் கம்பிகள் மற்றும் கதவு துடைக்க டஸ்டிங் ஸ்பிரே (Dusting spray ) தயாரிக்க வேண்டும்.
டஸ்டிங் ஸ்பிரே செய்ய வெள்ளை வினிகர், தண்ணீர் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்விட் சேர்த்து தூசி படிந்த இடங்களில் ஸ்பிரே செய்து கிளீன் செய்யலாம்.. வெள்ளை வினிகர் மேற்பரப்பில் படுத்திருக்கும் லேசான அழுக்கை தகர்க்க உதவுகிறது.
தண்ணீர் சேர்ப்பது வினிகரின் அடர்த்தியைக் குறைத்து கலவையை சமநிலைப்படுத்துகிறது. பாத்திரம் கழுவும் லிக்விட் லேசான எண்ணெய் பிசுக்கு, அதில் அண்டியுள்ள கடினமான அழுக்கை அகற்ற உதவுகிறது. இதை ஒரு மென்மையான மைக்ரோ ஃபைபர் துணியால் துடைப்பது சிறப்பு.
ஒரு நாளைக்கு ஒரு ரூம் என்று ஒரு மணி நேரம் செலவழித்து சுத்தம் செய்ய நமக்கு அவ்வளவு வேலை பளுவாக இருக்காது. பிறகு தரையில் மாப் (mop) போட்டு துடைக்க வீடு முழுதும் சுத்தம் ஆகிவிடும்.
என்ன பாஸ் எங்க? கிளம்பிட்டீங்க.. வீடு சுத்தம் செய்ய ஆரம்பிக்கலாமா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.