கதை அல்ல நிஜம்.. ஏர்போர்ட்டில் என் மனதை உருக்கிய இரு காட்சிகள்!
- ஸ்வணர்லட்சுமி
ஒருபுறம் ஒரு தாய் தன் மகன் வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது அவள் மனம் பட்ட பாட்டையும், இன்னொரு புறம் தன் தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதை கண்டு பத்து வயது சிறுமி அழுது புலம்பியதை பார்த்து என் நெஞ்சே வெடித்து விட்டது.
ஆமா ப்ரெண்ட்ஸ் அந்த தாய் என்னிடம் அவளுடைய மன வேதனையை கூறினாள். அந்தத் தாயின் பெயர் சுந்தரி.
சுந்தரியின் கதை.
அவர் கூறியதாவது...
அம்மா.. ஆசை ஆசையாக நாங்கள் பெற்ற ஒரே மகனை உயிருக்குயிராக வளர்த்தோம். என் கணவர் தனியார் அலுவலகத்தில் பணிபுரிபவர். நான் ஹவுஸ் வைஃப் தான். ஆனாலும் நாங்கள் எங்கள் மகனுடைய படிப்புக்காக அவன் எல்.கே.ஜி சேர்ந்தது முதல் அவனை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் வேண்டாத தெய்வம் இல்லை, நினைக்காத நாளில்லை.
எங்கள் இருவருக்கும் பெற்றோர் கிடையாது. அதனால் எங்கள் வாழ்வும்,உலகமும், சர்வமும் எங்கள் மகனே என்று நாங்கள் வாழ்ந்தோம். நாங்கள் இருவரும் இதுவரை எங்கள் பிறந்தநாளை கொண்டாடியதும் இல்லை. ஆனால், எங்கள் மகன் பிறந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் அதை ஒரு விழாவாக கொண்டாடுவோம். பூரிப்பு அடைவோம். எங்கள் மனம் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் மகன் ஆசைப்பட்டதை எல்லாம் எங்கள் வசதிக்கு இயன்ற வரை செய்தோம். அவன் கராத்தே கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான், ஸ்விம்மிங் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான், வயலின் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான், இவை அனைத்தும் எங்கள் வருமானத்தில் சிக்கனமாக வாழ்ந்து அவனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆவலாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தோம்.
நாட்கள் நகர்ந்தன. அவனும் பட்டப்படிப்பை படித்து சாப்ட்வேர் லைனில் வேலைக்கு அமர்ந்தான். ஆனால், அவன் அப்பாவிற்கோ அவன் பெரிய அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் அதுவும் நடக்கவில்லை. சரி எங்கள் மகன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று அந்த ஆசையையும் புதைத்துக் கொண்டோம். நமக்கு கடவுள் விட்ட வழி இதுதான் போல... பிறகு அவன் பணி புரியும் அலுவலகத்தில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறினான்.
சரி இதுவும் மகனின் சந்தோஷத்திற்காக என்று ஒப்புக்கொண்டு கல்யாணம் செய்து வைத்தோம். அவன் வேலை நிமித்தமாக சென்னைக்கு தனி குடித்தனம் சென்றான். எங்களுக்கு பேத்தியும் பிறந்தாள். மகாலட்சுமியே எங்கள் வீட்டிற்கு குழந்தையாக பிறந்துள்ளது என்று நினைத்து, எங்கள் கையில் பெரிய பொக்கிஷமே கிடைத்து விட்டது என்று பெருமிதம் அடைந்தோம்.
ஆறு மாதம் இவ்வாறு கடந்தது. பிறகு நான் வெளிநாட்டில் வேலை தேடுகிறேன் என்று எங்கள் மகன் கூறினான். எங்கள் நெஞ்சே பிளந்து விட்டது போல ஆகிவிட்டது. ஏதோ பார்க்கும் தூரத்தில் அடிக்கடி பார்க்கும் ஊரில் எங்கள் பிள்ளைகள் இருப்பதை எண்ணி மகிழ்ந்தோம். அதுவும் ஆறு மாதமே... எங்களை விட்டு பிரிந்து போகாதே கண்ணே... என்று மன்றாடினோம். ஆனால், அவர்கள் பிடிவாதமாக இது எங்கள் வாழ்க்கை என்பதில் தீர்மானமாக இருந்தனர்.
ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளையை பிரிந்து எப்படி வாழ்வோமோ? என்று பயம் தட்டியது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அவனுக்கு ஃபிளைட். அந்த நாள் வந்தது.இரவு பகலாக நான் தூங்கவில்லை. அழுது துடி துடித்து போனேன். நாங்கள் டாக்ஸியில் ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியில் இன்னும் ஐந்து மணி நேரம் தானே எங்கள் மகன் எங்களுடன் இருப்பான். அது ஒரு மணி நேரமானது,பிறகு அரை, மணி நேரமானது, பிறகு 10 நிமிடங்கள்,ஐந்து நிமிடங்கள்,ஒரே நிமிடம் ஆனது, ஏர்போர்ட்டுக்கு நாங்கள் வந்து விட்டோம். இனி என் மகனை நான் எப்பொழுது தொட்டு பார்ப்பேன்... இவ்வளவு தூரம் கடல் கடந்து போகிறானே... கடவுளே! இந்த நிமிடம் உலகம் அழிந்து விடக்கூடாதா? என்று கூட என் மனம் (சுந்தரியின் மனம் ) வேதனையுற்றது.
திரும்பவும் கொரோனா வந்து ஃபிளைட் எல்லாம் கேன்சல் ஆகிவிடக் கூடாதா! என்று கூட நினைத்தேன். இது அடி மனதில் உள்ள பாசத்தின் வெளிப்பாடு. மற்றபடி எந்த கெட்ட எண்ணமும் இல்லை. ஏனெனில், நாங்கள் அவன் சம்பாத்தியத்தில் அவர்கள் வாழ வேண்டும்,எங்கள் சம்பாத்தியத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்தோம். யாருக்காக? இப்படி சம்பாதிக்க போகிறான், எதற்காக இப்படி செல்கிறான்? என்று எங்களுக்கு புரியவில்லை அம்மா. இதுவரை நாங்கள் அவனை சம்பாதித்துக் கொடு என்று கூட கேட்டதில்லை அம்மா.. எங்களுக்கு தேவை அவன் எட்டும் தூரத்தில் இருந்து அவனைப் பார்த்து அவன் மனைவியை குழந்தையை பார்த்து எங்கள் வாழ்க்கையை கடக்க வேண்டும் என்பது தான் அம்மா. இது அவர்களுடைய சுயநலமா?..இல்லை எங்கள் விதியா?..என்று என் மனம் கடந்து தவிக்கிறது அம்மா.
கடைசி நொடி வந்தது உள்ளே சென்று செக்கின் (check in ) செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். குழந்தைகளை இனி எப்பொழுது பார்க்கப் போகிறேன். எங்கள் பிள்ளைகளை எப்போது தொட்டுப் பார்க்கப் போகிறோம் என்று அவனை கட்டித் தழுவி அழுதால் அந்த தாய். அவர்கள் டாட்டா..பை..பை.. என்று சொல்லிவிட்டு சென்றவுடன் ஏர்போட்டில் இருந்து வெளியே வந்த சுந்தரி மயங்கி கீழே விழுந்துவிட்டாள். உடனே அவர்கள் அருகில் நின்ற நான் ஓடிச் சென்று சுந்தரியை பிடித்துக் கொண்டேன்.என் மடியில் மயங்கி விழுந்து விட்டாள். பிறகு தண்ணீர் தெளித்து அருகில் இருந்த கடையிலிருந்து ஒரு காபி வாங்கி கொடுத்தவுடன் அவள் மயங்கிய நிலையில் இருந்து எழுந்தாள். அவள் கதறி அழுது என்னை கட்டிக்கொண்டு கூறியவை இவை.
அதிக பாசம் வைத்து விட்டேனே..அம்மா.. இதுதான் நான் செய்த குற்றமா? இந்த பாசம் வைத்த குற்றத்திற்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?என்று என்னை கட்டி தழுவிக் கொண்டே கேட்ட கேள்விகளும், வார்த்தைகளும்,அவள் கதறி அழுத அழுகையும், இன்றும் என் மனதில் ஆணி அடித்தார் போல் பதிந்து விட்டது. நான் சுந்தரியிடம் ஃபோன் நம்பர் கூட வாங்கவில்லை. சுந்தரியும் அவள் கணவரும் எப்படி இருக்கிறார்களோ? என்று நினைக்காத நேரமில்லை நான். எங்கிருந்தாலும் அவர்கள் மன தைரியத்துடன், ஷேமமாக வாழ வேண்டும் என்று நான் அவர்களுக்காக அனுதினமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன்.
வெளிநாட்டிற்கு செல்லும் பிள்ளைகளே! உங்கள் வாழ்க்கை முக்கியம்தான். ஆனாலும் பெற்றவர்களையும், அவர்களைப் பற்றியும் சிறிதளவு சிந்தியுங்கள்....!
இன்றைய காலங்களில் பிள்ளைகள் வளர்த்து வெளிநாட்டிற்குச் செல்வதும்,அங்கு வேலை தேடிக்கொண்டு குடியேறுவதும் சகஜம்தான். ஆனால் அதிக பாசம் வைத்த இந்த சுந்தரிக்கு மனவலிமை கொடு இறைவா ….
நான் கண்ட இன்னொரு காட்சி - 10 வயது சிறுமியின் கதையை அடுத்த பகுதியில் காண்போம்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான கதைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.