மகா சக்தி நீ…!
- டி.கலைமணி
பெண்ணே -
ஆயிரம் பெருமைகள் உனக்குண்டு !
உயிர்தந்து உடல்தந்து
மனிதத்தை உருவாக்கும் மகாசக்தி நீ!
படைப்பவன் பிரம்மனாம்...
கதைகள் சொன்னது!
அந்த பிரம்மனை இன்றுவரை எவரும் கண்டதேயில்லை!
பெண்ணே ….
படைப்பிற்கே மூலம் நீ...
நிஜமான பிரம்மன் நீ…
நிலமென்றால் உன் நினைவே நெஞ்சில் வரும்!
வாழும் நிலமென்றால் உன் நினைவே ஓடிவரும்!
உலகத்தின் ஆக்கம் நீ...
உலகமே
நீ... நீ... நீதான்!
வற்றாத நதியும் நீதான்...
வாசமிகு மலரும் நீதான்....
பக்தனுக்கு சக்தியின் வடிவம் நீ!பாமரனுக்கு அன்னை நீ!
ஆம்...
உலகமே உனது உருவாக்கம் தான் !
திசையெட்டும் உன் ஒளி முகமே...
உனக்குள்தான், உன்னால்தான எல்லாமே!
அடுப்படியில் நீ அடிமையாய் கிடந்தது அக்காலத்தில்!
இன்று உனது சக்தியை உலகம் உணர்ந்திருக்கிறது!
உனது திறமையை நீ நிருபித்திருக்கிறாய்!
"சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்நாட்டிலே" என்று
ஏட்டில் மட்டுமே இருந்த வார்த்தைக்கு நீ உயிருட்டி இருக்கிறாய்!
சந்திர மண்டலத்திலும் உன்பாதம் சரித்திரம் படைத்திருக்கிறது..
சரித்திரமாகும் அரசியலிலும் உன் புகழ் சாதனை படைத்திருக்கிறது
சிம்மாசனங்கள் உன்னால் சிறப்பு பெற்றிருக்கிறது..
உயிரை துச்சமென என்னும் ராணுவத்திலும் உன்பங்கு ஆரம்பமாகிவிட்டது..
எங்கெங்கு காணினும் இன்று நீ.. நீ... நீதான்!
காற்றுக்கு வேலிபோடுவதும் கடலுக்கு மூடிபோடுவதும்.
எப்படி முடியாத காரியமோ அதே போல் -
உன்னை அடிமைப்படுத்திடவும் இனி எவராலும் முடியாது!
எழு... எழு... உன்னால் எல்லாம் முடியும்!
படுக்கையறைப் பாவையாய் இன்னும் நீ அடிமையாய் இருப்பது மூடத்தனம்!
உனக்குள் இருக்கும் திறமையை இனியாவது நீ உணர்ந்து கொள்!
கருவறை ஆலயத்தில் மட்டும் இல்லை... உனக்குள்ளும்!
மானுடத்தின் ஆலயம் நீ!
மலரின் மென்மை..
துணிவின் வன்மை.. பிரபஞ்சத்தின் பெரும் சக்தி..
நீ.. நீ.. நீ..
எல்லாம் உன்னால் முடியும்..
ஆக்க சக்தியும் நீ!
துஷ்டர்களை அழிக்கும் சக்தியும் நீ!
உன்னை
உலகுக்குக் காட்டவேண்டிய காலம் இது!
வரலாறு படைக்க வேண்டிய காலம் இது!
எழு..எழு..
உன்னால் முடியுமென்று..
உனது
நம்பிமிக்கையே
உச்சத்திற்கு உன்னைக் கொண்டுச் செல்லும்!
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி 64 வயதுக்காரர். பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)