ஒருவரால் புறக்கணிக்கப்பட்டால்.. இன்னொருவரால் கொண்டாடப்படுவோம்.. இதுதான் வாழ்க்கை!
Jan 17, 2026,04:59 PM IST
டி. கலைமணி
வாழ்க்கை என்பது பலதரப்பட்ட மனிதர்களையும், உணர்வுகளையும் கடந்து செல்லும் ஒரு பயணம். அதில் நாம் சந்திக்கும் உறவுகளும், வலிகளும் நம்மை செதுக்குகின்றன.
ஒரு ஆண் தன் வெளிஉலக முகமூடியைக் கழற்றி வைக்கும் இடம் அவனது இல்லம். அவன் உலகையே எதிர்த்து நின்றாலும், தன் மனைவியிடம் மட்டுமே: தன் ஒட்டுமொத்த கோபத்தையும் உரிமையோடு காட்டுவான். வாதிடத் தெரிந்தும் அவளுக்காக அடிபணிந்து போவான்.
தன் உயிரினும் மேலான அன்பை நிபந்தனையின்றிப் பொழிவான். ஏனெனில், அவளிடம் மட்டுமே அவன் உண்மையான 'தானாக' இருக்க முடிகிறது.
வாழ்வில் சோதனைகளும் கஷ்டங்களும் வரவில்லை என்றால், நம்முடன் இருப்பவர்களின் முகமூடிகள் விலகப்போவதே இல்லை. கஷ்டங்கள் வரும்போதுதான் நிஜமான பலம் என்னவென்று நமக்குத் தெரியும். நெருக்கடியான நேரங்களே பல கசப்பான உண்மைகளை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
உண்மையான உறவுகளைக் கண்டெடுப்பது இன்று கடலில் தொலைந்த ஊசியைத் தேடுவதற்குச் சமமாகிவிட்டது. பாசம் காட்டிய காலங்கள் போய், இன்று சுயநலமே பிரதானமாகிவிட்டது. தேவைகள் இருக்கும் வரை மட்டுமே உறவுகள் கொண்டாடப்படுகின்றன.
யாரையும் காயப்படுத்தக் கூடாது, நாமும் காயப்படக் கூடாது என்று நினைப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறந்த வழி: நலம் விசாரிப்பதோடு பேச்சை நிறுத்திக் கொள்வது. அளவுக்கு மிஞ்சிய பேச்சு தேவையற்ற விவாதங்களையும், மனஸ்தாபங்களையும் உருவாக்கும். தேவையான இடைவெளி உறவுகளைத் தரமாக வைத்திருக்கும்.
யாராவது உங்களைப் புறக்கணித்தால் கவலைப்படாதீர்கள். அது உங்களின் முடிவு அல்ல, ஒரு புதிய தொடக்கத்தின் புள்ளி. இன்று ஒருவரால் நீங்கள் புறக்கணிக்கப்பட்டால், நாளை உங்களின் மதிப்பறிந்த ஒருவரால் நிச்சயம் கொண்டாடப்படுவீர்கள். ஒவ்வொரு கதவு அடைக்கப்படும் போதும், சிறப்பான மற்றொரு கதவு திறக்கப்படும். இதுதான் வாழ்க்கையின் நியதி.