கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர்.. அருட்பெரும் வள்ளலார்

Su.tha Arivalagan
Oct 05, 2026,04:58 PM IST

- தி. மீரா


வள்ளலார் என அன்புடன் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823  ஜனவரி 30, 1874) தமிழ்நாட்டின் பெரும் ஆன்மீகவாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஞானி ஆவார்.


அவரது இயற்பெயர் இராமலிங்கம். பிறந்த ஊர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மருதூர். அவரது பெற்றோர் இராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதியினருக்கு ஐந்தாவது மகன்.


இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், சென்னையில் தமது அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே அருளாற்றலும், தவ ஆற்றலும் நிரம்பிக் காண்போர் வணங்கும் வாழ்வை வாழ்ந்தார்.


வள்ளலார் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை; முழுமையாக ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டார். சைவ சமயத்தின் அடிப்படைகளை ஆழமாகக் கற்று, பின்னர் அனைத்து மதங்களின் உள்ளார்ந்த உண்மை ஒன்றே என்ற கருத்தை வலியுறுத்தினார்.


"சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்ற ஆன்மீகப் பாதையை நிறுவினார். கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர் என்று போதித்தார். 1867-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான தர்ம சபையை நிறுவினார்.




சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் இலவச உணவு (அன்னதானம்) வழங்கினார். இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். சாதிய அடுக்குமுறையைத் தன் நூல்களிலும், பணிகளிலும் கடுமையாகச் சாடினார். மதவெறியைத் தவிர்த்தல், பசித்தவர்களுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி உணவளித்தல் ஆகியவை அவரது முக்கிய கொள்கைகளாகும்.


ஜனவரி 30, 1874 அன்று மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் மாளிகையில் தனது பூதவுடலை சோதியுடன் கலந்து மறைந்தார் என்று நம்பப்படுகிறது. "மரணத்தை வென்ற ஒரு மனிதனின் வரலாறு" என்று வள்ளலாரின் வாழ்க்கை போற்றப்படுகிறது.


திருவருட்பா – வள்ளலாரின் முதன்மை நூல்; ஆறாம் திருமுறை எனப் போற்றப்படுகிறது. பல கீர்த்தனைகள், பொன்மொழிகள், மற்றும் ஆன்மீகக் கட்டுரைகள் இயற்றியுள்ளார். "அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்" – வள்ளலார்


வள்ளலாரின் வாழ்க்கை வரலாறும் குறிக்கோள்களும் இன்றும் சமூக நீதி, மனிதநேயம், மற்றும் ஆன்மீக ஒற்றுமைக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.


ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பது வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) உலகுக்கு அளித்த மிக முக்கியமான போதனையாகும்.   இதுவே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று வள்ளலார் உறுதியாகக் கூறியுள்ளார்.


ஜீவ காருண்யம் என்றால் என்ன?


"ஒரு ஜீவன் பசி, தாகம், பிணி, இச்சை, வறுமை, பயம், கொலை முதலியவற்றால் துன்பப்படுவதை இன்னொரு ஜீவன் பார்க்கும் போதும், அறிந்தபோதும், கேட்டபோதும் அந்த ஜீவனுக்கே தன்னை அறியாமலே உருக்கம் உண்டாகும்." – இதுவே ஜீவ காருண்யம் என்று வள்ளலார் வரையறுக்கிறார்.


அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம். ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று வள்ளலார் கூறியுள்ளார்.