வாலிபக் கவி மட்டுமல்ல.. அவதாரக் கவிஞரும் கூட.. மறக்க முடியாத வாலி
Oct 29, 2026,11:45 AM IST
- தி. மீரா
கவிஞர் வாலி தமிழ்த் திரைப்பட வரலாற்றின் மிகச் செல்வாக்கு மிக்க பாடலாசிரியர்களில் ஒருவர். 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, பல தலைமுறை ரசிகர்களின் நினைவில் இடம்பெற்றவர்.
கவிஞர் வாலியின் இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன். இவர் 29 அக்டோபர் 1931 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்தார்; ஸ்ரீரங்கம் இவரது "சந்த ஊர்".. அதாவது சொந்த ஊர்.
“வாலி” என்ற புனைபெயரை ஏற்று தமிழ் இலக்கியம் மற்றும் திரைப்படப் பாடல் துறையில் இயங்கினார். 1961-இல் நல்லவன் வாழ்வான் திரைப்படத்தின் “சிரிக்கிறாள் இன்று சிரிக்கிறாள்…” பாடல் மூலம் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார். 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி 81 வயதில் சென்னையில் காலமானார்.
வாலி திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாமல் கவிதை நூல்களும் எழுதியுள்ளார். அவற்றில் பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவரது பாடல்கள் காதல், தத்துவம், ஆன்மீகம், சமூக அக்கறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை எளிய தமிழில் பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றன.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்திலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சிலம்பரசன் வரை பல தலைமுறை நடிகர்களின் படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனமும் 17 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார். அவரது 80-வது பிறந்தநாளில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 பாடல்களை உள்ளடக்கிய வாலி 1000 தொகுப்பு வெளியானது.
கவிஞர் வாலியின் பெயரில் ஆண்டுதோறும் இரண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன: ஒன்று கவிஞருக்கும், மற்றொன்று கவிதை அல்லாத துறையில் சிறப்பான படைப்பாளருக்கும். அவர் “வாலிப கவிஞர்” என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம், வயது முதிர்ந்த பின்னரும் இளம் தலைமுறைக்கு ஏற்ற மொழி, இசை மற்றும் உணர்வுகளுடன் பாடல்களை எழுதியதே ஆகும்.
கவிஞர் வாலி தமிழ்த் திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் நீண்ட நட்பும், பரந்த அனுபவமும் பெற்றவர். அவரது தொடர்புகள் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ் வரை பல தலைமுறைகளை உள்ளடக்கியவை
எம்.ஜி.ஆருடனான நட்பு
வாலியின் திரைவாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை நல்லவன் வாழ்வான் (1961) திரைப்படம்; இது எம்.ஜி.ஆர் நடித்த படம். அதன் பிறகு 1960 முதல் 1970 வரை எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதினார்.
படகோட்டி திரைப்படத்தின் “தொட்டால் பூ மலரும்” பாடல் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வாலி எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கும் பாடல் எழுதினார். எம்.ஜி.ஆர் அவரது திறமையை நம்பியிருந்ததால், தன் படங்களுக்கு வாலியே பாடல் எழுதுவார் என்று பொதுவெளியில் அறிவித்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
சிவாஜி கணேசனுடனான உறவு
சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் பெரியண்ணன், அன்புக் கரங்கள் திரைப்படத்திற்காக வாலியை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு வாலி சிவாஜி நடித்த படங்களுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார்.
வாலி சிவாஜி படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கியபோதும் எம்.ஜி.ஆர் கோபம் கொள்ளவில்லை; மாறாக, அனைத்து நடிகர்களுக்கும் எழுத வேண்டும் என்று ஊக்குவித்ததாக வாலி நினைவு கூர்ந்துள்ளார்.
திரையுலகில் இணைந்த ஆரம்ப காலத்தில் கவியரசர் கண்ணதாசனுடன் வாலிக்குப் போட்டி உணர்வு இருந்தது. ஆனால் கண்ணதாசன் அவர்களுடைய மயக்கமா கலக்கமா! மனதிலே குழப்பமா! பாடல் வாலி அவர்களின் இக்கட்டான நேரத்தில் தன்னம்பிக்கை தந்தது. திருப்பு முனையாக அமைந்தது. காலப்போக்கில் அது நெருங்கிய நட்பாக மாறியது.
வாலி எழுதிய சில பாடல்களை ரசிகர்கள் கண்ணதாசன் எழுதியதாகவே நினைத்ததும், அவரது பாணியின் தாக்கத்தைக் காட்டுகிறது.
வாலி தனது காலத்து நடிகர்களுடன் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் மற்றும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
இளையராஜா இசையில் மட்டும் அவர் சுமார் 5,000 பாடல்கள் எழுதியுள்ளார்.இது அவரது நட்பும் தொடர்பும் எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.
நடிகர் நாகேஷின் பங்கு
திரையுலகில் தொடக்க காலத்தில் நடிகர் நாகேஷ், வாலியை இயக்குநர் கே. பாலசந்தருக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த அறிமுகமே வாலியின் திரைப்படப் பயணத்திற்கு முக்கிய உதவியாக அமைந்தது.
வாலி, 1995-இல் நானும் இந்த நூற்றாண்டும் என்ற தன் நினைவுக் குறிப்பு நூலை எழுதினார். அதில் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஆளுமைகளுடனான அவரது தொடர்புகளும் அனுபவங்களும் பதிவாகியுள்ளன.