நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்

Su.tha Arivalagan
Jan 09, 2026,04:48 PM IST

சென்னை : ஒரு காலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தான் ரஜினி, கமல் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீசாகும். சமீப ஆண்டுகளாகவே தீபாவளிக்கு பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. ஆனால் பொங்கலுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வரும் என்பதை அதை கணக்கிட்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட்டிக் கொண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி பொங்கல் ரிலீஸ் படங்கள் எப்பவுமே வசூலை வாரி குவிக்கும்.


பெரிய ஸ்டார்களின் படங்கள் வரும் சமயத்தில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்தால் வசூல் பார்க்க முடியாது என்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேசில் கலந்த கொள்வதே கிடையாது. அப்படி தான் இந்த ஆண்டும் விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான தியேட்டர்கள் இந்த படங்களுக்கு என்றே ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஜனநாயகன் படத்திற்கு ரிலீஸ் தேதி வரை சென்சார் சான்று கிடைக்கவில்லை. படத்திற்கு யு/ஏ சான்று வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட பிறகும் தணிக்கை வாரியம் எதிர்ப்பால் வழக்கு முடியாமல் உள்ளது. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என்றே தெரியாத நிலை உள்ளது. 




மற்றொரு புறம் பராசக்தி, கடைசி நிமிடம் வரை பதற்றத்தில் வைத்து ஒரு வழியாக ரிலீஸ் முந்தைய நாள் யு/ஏ சான்று வழங்கி விட்டார்கள். அதற்கு பதில், படத்தில் கிட்டதட்ட 25 வசனங்களை கட் செய்ய சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. கார்த்தி நடித்த வா வாத்தியர் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இப்படி பெரிய ஹீரோக்களின் படங்கள் இத்தனை நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், இது பற்றி திரையுலகை சேர்ந்த யாரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. ஜனநாயகன் படத்திற்காக நேற்று ஒரு சில நடிகர்கள், டைரக்டர்கள் தான் ட்வீட் போட்டார்கள்.


இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், அதில் முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் நாசர், விஷால், உச்ச நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவ்வளவு ஏன் தான் நடித்த ஜனநாயகன் படம் பற்றி விஜய் இது வரை வாய்திறக்கவே இல்லை. பெரிய நடிர்களின் படங்கள் ரிலீசாவதற்கே இந்த நிலையை என்றால் மற்ற நடிகர்களின் படங்களை கேட்கவே வேண்டாம். வழக்கமாக படங்கள் கதை திருட்டு, சம்பள பாக்கி உள்ளிட்ட சட்ட சிக்கல்களை தான் சந்திக்கும். ஆனால் அனைத்து வேலைகளும் முடிந்து, ரிலீஸ் சமயத்தில் தணிக்கை சான்று கிடைப்பதற்கே இத்தனை போராட்டம் வருவது இப்போது தான் நடக்கிறது.


இதை போன்ற நிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவே நசுக்கப்படும் நிலை உருவாகும். ஒரு படைப்பாளியின் படைப்பு, நூற்றுக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு, தயாரிப்பாளரின் பணம் என மொத்தமும் வீணாகும் நிலை ஏற்படும். சினிமா துறையே அழியும் நிலை கூட ஏற்படும். இது போன்ற சமயங்களில் பிரபலங்கள் பலரும் ஜனநாயன், பராசக்தி படங்களுக்கு துணையாக தோள் கொடுத்து நின்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் தங்களின் ஆதரவையாவது தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை சினிமாத்துறையில் கனத்த மெளனம் நிலவுவதற்கு என்ன காரணம் புரியாததால், சிறிய பட்ஜெட் படம் எடுப்பவர்கள் மட்டுமின்றி, பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் என்ன செய்வது என புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.