எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
சென்னை: எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தமிழ் மொழியின் பழமை குறித்த விவாதங்களை மேலும் விரிவாக்கியுள்ளது.
எகிப்தின் புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரிய தளமான மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள பாறைக் கல்லறைகளில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான 30-க்கும் மேற்பட்ட இந்திய மொழி கல்வெட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் 20 கல்வெட்டுகள் தமிழ் பிராமி (தமிழி) மொழியில் உள்ளன.
சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசிய ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சார்லோட் ஸ்மித் ஆகியோர் இந்தக் கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கல்வெட்டுகள், கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் சிகை கொற்றன் என்ற பெயர் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் எட்டு இடங்களில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் 'கோபன் வரத கந்தன்' மற்றும் 'சாத்தன்', 'கீரன்' போன்ற பெயர்களும் காணப்படுகின்றன.
பொதுவாக ரோமானியர்கள் மட்டுமே இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு பண்டைய தமிழர்களும் எகிப்து வரை சென்று தங்கியிருந்து வணிகம் செய்ததற்கான வலுவான சான்றாக அமைந்துள்ளது.
தமிழ் வணிகர்கள் வெறும் வணிகத்திற்காக மட்டும் அங்கு செல்லவில்லை; அவர்கள் எகிப்தின் உட்பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த பிரம்மாண்டமான கல்லறைகளைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளாகவும் இருந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
அங்குள்ள கிரேக்க கல்வெட்டுகளைப் போலவே தமிழர்களும் தங்கள் பெயர்களைப் பொறித்துள்ளனர். இது அந்த வணிகர்கள் பன்மொழி அறிவு கொண்டவர்களாகவும், கிரேக்க கலாச்சாரத்தைப் புரிந்தவர்களாகவும் இருந்ததைக் குறிக்கிறது.
கொற்றன் என்பது வெற்றி மற்றும் வலிமையைக் குறிக்கும் சொல்லாகும். இது சேர நாட்டு மன்னர்கள் மற்றும் கொற்றவை தெய்வத்துடன் தொடர்புடையது. இந்த வணிகர் பண்டைய தமிழகத்தின் சேரர் பகுதிகளில் இருந்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் கூறுகையில், இவ்வளவு புகழ்பெற்ற சுற்றுலாத் தடத்தில் இத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்வெட்டுகள் யாராலும் கவனிக்கப்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. இது பண்டைய இந்தியாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை உறுதிப்படுத்துகிறது என்றார்.
தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் கா. ராஜன், இது பண்டைய தமிழகத்தின் கடல் வணிக வரலாற்றில் ஒரு மைல்கல் கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு மகிழ்ச்சி
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.
ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.