தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

Su.tha Arivalagan
Aug 07, 2026,11:40 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடர் (பட்ஜெட் மீதான விவாதம்) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வணிக வரித் துறையில் மிக முக்கியமான சட்ட நடவடிக்கையாக "தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (திருத்தச்) சட்ட முன்வடிவு" சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்ட முன்வடிவை வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.


சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னணி :


சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன. அப்போது, வணிக மற்றும் வரி நிர்வாக முறைகளை மேலும் சீரமைக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மதிப்புக் கூட்டு வரி (VAT) சட்டத் திருத்த மசோதா பேரவையின் முன்வைக்கப்பட்டது.


மசோதாவை அறிமுகம் செய்து பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், வரி வசூல் நடைமுறைகளை மிகவும் எளிமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்ற இத்திருத்தங்கள் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.


மசோதாவின் முக்கிய நோக்கம் மற்றும் சிறப்பம்சங்கள்




வரி நிர்வாக சீர்திருத்தம்: வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் குறைத்து, வரி தாக்கல் செய்யும் முறையை மேலும் எளிதாக்குதல்.

  

வருவாய் பெருக்கம்: மாநில அரசின் வருவாயை பெருக்கும் அதே வேளையில், வரி ஏய்ப்புகளைத்   தடுப்பதற்கான வலுவான   கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல்.


விதிகளில் நெகிழ்வுத்தன்மை: மாறும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சட்ட விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு வணிகச் சூழலை மேம்படுத்துதல்.


விவாதத்திற்கு பிறகு ஒரு மனதாக நிறைவேறியது :


சட்டப்பேரவையில் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதன் மீதான விரிவான விவாதம் உறுப்பினர்களிடையே நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த சட்டமுன்வரைவிற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று, ஆதரவு தெரிவித்தன. பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் இந்த சட்ட முன்வரைவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.