100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

Su.tha Arivalagan
Jan 23, 2026,05:33 PM IST

சென்னை: மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 23, 2026) ஒரு முக்கிய தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பொதுவாக '100 நாள் வேலைத் திட்டம்' என்று மக்களிடையே அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் இந்த திட்டத்தின் பெயரை, விபி ஜி ராம் ஜி என பெயர் மாற்றி மத்திய அரசு அறிவித்தது.




மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, இத்திட்டத்தின் பெயரிலிருந்து 'மகாத்மா காந்தி' என்ற பெயரை நீக்கிவிட்டு, பல்வேறு உள்நோக்கங்களுடன் 'விபி-ஜி-ராம்-ஜி' எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதோடு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது


சட்டமன்றத்தில் இந்தத் தீர்மானத்தைப் முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது என்பது நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவரின் அடையாளத்தை மறைக்கும் முயற்சியாகும். அரசியல் உள்நோக்கங்களுடன் இத்தகைய பெயர் மாற்றங்கள் செய்யப்படுவதை ஏற்க முடியாது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது அதன் பழைய பெயரிலேயே, அதாவது மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


இந்தியாவின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையையே சிதைக்கும் வகையிலும், தேசப்பிதாவின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு இந்தத் தீர்மானத்தின் மூலம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.