அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

Su.tha Arivalagan
Jan 31, 2026,06:08 PM IST
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த உறுதிமொழியை ஏற்று இடை நிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 37 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து வந்தது. சென்னையில் முகாமிட்டு தொடர்ந்து ஆசிரியர்கள் பல விதமாக போராட்டம் நடத்தி வந்தனர். போலீஸாரால் ஆசிரியர்கள் கைது செய்யப்படும் சூழலும் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்ததால் ஜனவரி  மாத சம்பளமும் ரத்து செய்யப்படும் சூழலும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உத்தரவாதம் வந்து சேர்ந்தது. அதை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் நமது மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம். மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மூன்று நபர்கள் ஊதிய குழுவின் அறிக்கையை பெற்று எங்களது ஒற்றைக் கோரிக்கையை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்றிட உதவுமாறு வேண்டுகிறோம். 

மேலும் இந்த போராட்ட நாட்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து நமது ஆட்சியுடன் இடைநிலை ஆசிரியர்கள் என்றென்றும் தொடர்ந்து பயணிக்க எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.