முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக., 14ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டபேரவை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதனையடுத்து இந்த ஆட்சி முடிவிற்கு வர உள்ளது. அதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு திட்டங்களையும் திமுக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் அடுத்த கட்ட திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன் ஆணவக் கொலை தடுப்பிற்கான சிறப்புச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.