தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு
சென்னை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து அதிமுக தவிர திமுக, தமிழக வெற்றிக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தக் கூட்டம்:
வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் (SSR - Special Summary Revision) தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கட்சிகள் வெளிநடப்பு செய்ய காரணம்:
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கண்டித்தும் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்தன. குறிப்பாக, ஆளும்கட்சியான தமிழக வெற்றிக்கழம் முதல் ஆளாக வெளிநடப்பு செய்தது. எஸ்ஐஆர் விவகாரத்தில் தவெக எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சித்து வந்த நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து தவெக வெளிநடப்பு செய்துள்ளது.
தவெக.,வை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (இ.கம்யூ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய தேசிய காங்கிரஸ், ஆம் ஆத்மி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), நாம் தமிழர் கட்சி (நாதக) மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர். அதிமுக மட்டும் இறுதி வரை இந்த கூட்டத்தில் பங்கேற்றது.
அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்:
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு, பெயர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும், தேர்தல் ஆணைத்தின் வெளிப்படைத்தன்மை குறித்தும் பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்க இருந்த நிலையில், அரசியல் கட்சிகள் இவ்வாறு ஒருங்கிணைந்து வெளிநடப்பு செய்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சிகள் வெளிநடப்பு செய்திருப்பது, தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிரித்து பேசிய அதிமுக-திமுக நிர்வாகிகள் :
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் குழுவும், திமுக நிர்வாகிகள் குழுவும் அருகருகே அமர்ந்து இருந்ததுடன், அனைவரும் சிரித்து பேசிக் கொண்டனர். குறிப்பாக திமுக நிர்வாகிகள் பலரும் அதிமுக.,வின் ஜெயக்குமாருடன் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். இது அதிமுக-திமுக எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியது. ஆனால் வெளிநடப்பு செய்யும் போது மட்டும் திமுக நிர்வாகிகள் மட்டும் பரந்தாமன் தலைமையில் வெளியேறினர். அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.