திமுகவுடன் கூட்டணி.. தேமுதிகவிலிருந்து ஏற்கனவே போனவர்கள் நிலை என்னாகும்?

Su.tha Arivalagan
Feb 19, 2026,02:39 PM IST
சென்னை:  தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இது யாருக்கு கவலை அளித்துள்ளதோ இல்லையோ, தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களைக் கலவரப்படுத்தியுள்ளதாம்.

கடந்த காலங்களில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வகித்த தேமுதிக, தற்போது திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. திமுக - தேமுதிக கூட்டணியால் திமுகவில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வரும் பல முக்கியமான முன்னாள் தேமுதிக புள்ளிகள் கலவரமடைந்துள்ளார்களாம்.



கட்சியில் தங்களுக்கு இருந்து வரும் முக்கியத்துவம் குறையும் அல்லது பறிபோகும் என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளதாம். 

ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே மோதல் ஏற்பட்டு அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக பிரிந்த பின்னர் தேமுதிகவில் எம்எல்ஏக்களாக இருந்த பலர் அங்கிருந்து விலகி அதிமுக பக்கம் போனார்கள். அதன் பின்னர் பல முக்கியத் தலைவர்கள் படிப்படியாக விலகிச் சென்றார்கள். விஜயகாந்த்துக்கு நிழலாக இருந்த பலரும் அப்படி விலகிப் போனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் வி.சி. சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் தற்போது திமுகவில் உள்ளனர்.

இந்த இருவரில் வி.சி. சந்திரகுமார் ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். எஸ்.ஆர். பார்த்திபன் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக எம்.பியாக இருந்தவர். இவர்கள் தவிர வேறு சிலரும் கூட தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் தற்போது தேமுதிகவே திமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் இவர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேமுதிகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்தவர்களை, அக்கட்சியின் தொண்டர்கள் துரோகிகள் என்று விமர்சிப்பது வழக்கம். பிரேமலதா விஜயகாந்த்தும் கூட அப்படித்தான் விமர்சிப்பார். இப்போது இரு கட்சிகளும் ஒரே மேடையில் அமரும்போது, மேடையில் பழைய தோழர்களுடன் கைகுலுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது உள்ளூர் மட்டத்திலான அரசியலில் அவர்களுக்கு ஒருவித நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், தற்போது திமுக வலுவாக உள்ள சட்டசபைத் தொகுதிகளை நிச்சயம் தேமுதிகவுக்குத் தராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் உள்பட ஒற்றை இலக்கத்தில்தான் தேமுதிகவுக்கு திமுக சீட்டுகளை ஒதுக்கக் கூடும் என்பதால் ஈரோட்டைச் சேர்ந்த சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் போன்றோருக்குப் பிரச்சினை வர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

தலைவர்கள் மட்டத்தில் கூட்டணி ஏற்பட்டாலும், அடிமட்டத் தொண்டர்களிடையே ஒற்றுமை ஏற்படுவது சவாலான காரியம். காரணம், மறைந்த கலைஞர் உயிருடன் இருந்தபோது விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தபோது நடிகர் வடிவேலு, திமுக மேடையில் விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியதை இன்று வரை தேமுதிகவினர் மறக்கவில்லை. விஜயகாந்த்தை குடிகாரன் என்றெல்லாம் கடுமையாக  பேசியிருந்தார் வடிவேலு. அந்தத் தேர்தலில்தான் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். 

திமுக - தேமுதிக இடையிலான மோதல் நாடறிந்தது. மிகக் கடுமையான சொல்லாடல்களை இரு தரப்புமே பரஸ்பரம் பரிமாறிக் கொண்டுள்ளன. தனது கல்யாண மண்டபத்தை இடித்தது திமுக தான் என்று கடுமையாக குற்றம் சாட்டிப் பேசியவர் விஜயகாந்த். இந்த நிலையில் இரு கட்சிகளும் கூட்டணியாக இணைந்திருப்பது சில காலத்திற்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால் அரசியலில் எல்லாமே சகஜம் என்பதற்கேற்ப இந்தக் கூட்டணியும் போகப் போக இயல்பாகி விடும் என்று எதிர்பார்க்கலாம்.

எது எப்படியோ, 2026 தேர்தல் களம் பல 'அரசியல் அந்தாதி'களை அரங்கேற்றப் போவது மட்டும் உறுதி.