மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
சென்னை : விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து படக்குழு சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு, படத்தின் ரிலீஸ் தேதியான ஜனவரி 09ம் தேதிக்கே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை கிடைக்காததற்கும், திட்டமிட்டபடி படம் ரிலீசாக முடியாமல் தடை ஏற்பட்டுள்ளதற்கும் மத்தியில் ஆளும் பாஜக தான் காரணம் என சினிமா பிரபலங்கள் பலர் மறைமுகமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மோடி அரசு தான் காரணம். இதை வைத்து விஜய்யை மிரட்ட பார்க்கிறார்கள் என தமிழக காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், தமிழக தேர்தலுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து போட்டப்பட்டுள்ள இந்த பதிவில்,
"நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக் கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜனநகாயகன் பட விவகாரம் அரசியல் பிரச்சனையாக மாறி உள்ளது.