ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
Mar 19, 2026,10:58 AM IST
சென்னை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அன்று மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்துடன் கூடிய விடுமுறை :
தேர்தல் திருவிழாவில் ஜனநாயகக் கடமையை அனைவரும் நிறைவேற்றும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேர்தல் ஆணையம் இந்த சலுகையை உறுதி செய்துள்ளது. குறிப்பாக, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், வாக்குப்பதிவு நாளன்று தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுக்கான அறிவிப்பு :
தமிழகத்தைத் தவிர்த்து தேர்தல் நடைபெறும் பிற மாநிலங்களுக்கும் விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவதால், ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் அந்தந்தப் பகுதிகளில் விடுமுறை விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் விழிப்புணர்வு :
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, வாக்குச் சதவீதத்தை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. "உங்கள் வாக்கு உங்கள் உரிமை" என்ற அடிப்படையில், வேலைப்பளு காரணமாக எவரும் வாக்களிப்பதைத் தவிர்த்துவிடக் கூடாது என்பதே இந்த விடுமுறை உத்தரவின் முக்கிய நோக்கமாகும்.
வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இதர ஆவணங்களுடன் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் எனப் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.