பெண் வேட்பாளர்களே இல்லாத தமிழகத்தின் 46 தொகுதிகள்

Su.tha Arivalagan
Apr 13, 2026,11:07 AM IST

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பெண்களைக் கவர பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும், இலவசத் திட்டங்களையும் வாரி வழங்கி வருகின்றன. ஆனால், அதிகாரப் பகிர்வு என்று வரும் போது பெண்களுக்கான அங்காரம் வழங்கப்படவில்லையோ என நினைக்க வைத்துள்ளது : 


வாக்காளர்களில் முதலிடம்; வேட்பாளர்களில் பின்னடைவு :


தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், 214 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்தமுள்ள வாக்காளர்களில் பெண்கள் சுமார் 2.93 கோடி பேர், ஆண்கள் 2.80 கோடி பேர். பெண்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், அவர்களைக் கவர அரசியல் கட்சிகள் போட்டிப் போடுகின்றன. இருப்பினும், தமிழகத்தின் 46 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாக உருவெடுத்துள்ளது.


புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?




இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில் 3,579 பேர் ஆண்கள், வெறும் 443 பேர் மட்டுமே பெண்கள். ஒருவர் திருநங்கை வேட்பாளர் (வில்லிவாக்கம் தொகுதி).

- 46 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே இல்லை.

- 63 தொகுதிகளில் தலா ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே உள்ளனர்.

- 60 தொகுதிகளில் தலா இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.


கட்சி வாரியாக பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை:


பெண்களுக்கு அதிக இடங்கள் அளிப்பதாகக் கூறும் பிரதான கட்சிகளின் நிலைப்பாடு வருமாறு:


திமுக கூட்டணி: மொத்தம் 25 இடங்கள் (திமுக - 19, காங்கிரஸ் - 2, விசிக - 2, சிபிஎம் - 1, தேமுதிக - 1).


அதிமுக கூட்டணி: மொத்தம் 28 இடங்கள் (அதிமுக - 20, பாஜக - 5, பாமக - 3).


தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய்யின் தவெக 23 பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது.


நாம் தமிழர் கட்சி: சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே 50% இட ஒதுக்கீடு என்ற கொள்கையின் அடிப்படையில் 116 பெண் வேட்பாளர்களையும், ஒரு திருநங்கையையும் நிறுத்தி உள்ளார்.


பெண்களே இல்லாத முக்கிய தொகுதிகள்:


தலைநகர் சென்னையைச் சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், துறைமுகம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் இல்லை. அதேபோல், மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் மத்திய ஆகிய நான்கு முக்கிய தொகுதிகளிலும் பெண்கள் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஓசூர், சேலம் (மேற்கு), கோயம்புத்தூர் (தெற்கு), திருச்சி (கிழக்கு), தஞ்சாவூர் போன்ற முக்கிய தொகுதிகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்.


விதிவிலக்கான தொகுதிகள்:


ஆரணி தொகுதியில் அதிகபட்சமாக 9 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மதுராந்தகம் (SC) மற்றும் தாராபுரம் (SC) ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் நான்கு பிரதான கூட்டணிகளும் பெண் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளதால், அங்கு பெண் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டி நிலவுகிறது.


பெண்களுக்கு மாத உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் எனச் சலுகைகளை வழங்கும் கட்சிகள், சட்டமன்றத்தில் அவர்களின் குரல் ஒலிக்கத் தேவையான இட ஒதுக்கீட்டை வழங்குவதில் தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பெண்களைப் பார்க்காமல், அதிகாரப் பகிர்விலும் சம உரிமை வழங்கினால் மட்டுமே உண்மையான சமூக மாற்றம் சாத்தியமாகும்.