மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

Su.tha Arivalagan
Jun 25, 2026,12:51 PM IST

சென்னை: "இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இல்லை" என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழக மின்சார வாரியத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமைச்சர், முந்தைய ஆட்சிக் காலங்களுடன் ஒப்பிட்டு மின்வாரியத்தின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.


மின் கட்டண உயர்வு இல்லை - அமைச்சர் அறிவிப்பு

தமிழக மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மின்வாரியப் பணிகளை மேம்படுத்துவது மற்றும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை உறுதிப்படுத்தினார்.


வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் :

மின்வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடந்த கால செயல்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் வெளியிட்டார். அதில், "வருவாயை விட செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதே" மின்வாரியத்தின் தற்போதைய பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார்.


அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:




2001 - 2006 காலகட்டம்: வருவாய்: ரூ.59,084 கோடி


செலவு: ரூ.67,439 கோடி


நிதிப் பற்றாக்குறை: ரூ.8,355 கோடி


2021 - 2026 காலகட்டம்: வருவாய்: ரூ.4,97,996 கோடி


செலவு: ரூ. 5,32,443 கோடி


நிதிப் பற்றாக்குறை: ரூ.34,447 கோடி


கடந்த 2001-2006 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2021-2026 ஐந்தாண்டு காலத்தில் மின்வாரியத்தின் வருவாய் மற்றும் செலவினங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதுடன், அதன் நிதிப் பற்றாக்குறையானது ரூ. 34,447 கோடி என்ற உச்சத்தைத் தொட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கவலை தெரிவித்தார்.


சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை :

மின்வாரியத்தின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், பொதுமக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்ற அரசு விரும்பவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பது, உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவது மற்றும் மின் இழப்புகளைத் தடுப்பது ஆகியவற்றின் மூலம் மின்வாரியத்தை மீண்டும் சீரான லாபப் பாதைக்குக் கொண்டு வர தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.